சென்னை: தமிழ்நாடு விளையாட்டு அறிவியல் சர்வதேச கருத்தரங்கத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். தமிழ்நாடு பட்ஜெட்டில் 2023-24ம் ஆண்டிற்கான விளையாட்டு அறிவியல் தொடர்பான சர்வதேச கருத்தரங்கம் நடத்தப்படும் என்றும், இதற்காக ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கப்படும் என்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார். அதனடிப்படையில், தமிழ்நாடு விளையாட்டு அறிவியல் சர்வதேச கருத்தரங்கம் (டாஸ்கான் 2023), சென்னை தாஜ் கோரமண்டலில் 2023 நவம்பர் 7 மற்றும் 8 ஆகிய 2 நாட்கள் நடைபெற உள்ளது.
இதில் இந்தியா, இங்கிலாந்து, நெதர்லாந்து, மலேசியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்து விளையாட்டு அறிவியல் தொடர்பான அறிஞர்கள் தலைமையில் சுமார் 250 பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். சர்வதேச விளையாட்டு அறிவியல் கருத்தரங்கம் தமிழ்நாட்டில் நடத்துவது இதுவே முதல் முறை. இது, விளையாட்டு விஞ்ஞானிகள், பயிற்சியாளர்கள், பயிற்றுநர்கள் மற்றும் விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் மற்றும் விளையாட்டு தொடர்பான கொள்கை வகுப்பாளர்களை ஒன்றிணைக்கிறது. இந்த சர்வதேச கருதரங்கத்தில் விளையாட்டு வீரர்களின் செயல்திறன் மற்றும் அவர்களின் நல்வாழ்வை மேம்படுத்த விளையாட்டு அறிவியலை பயன்படுத்துவது தொடர்பாகவும், தமிழ்நாட்டில் விளையாட்டு அறிவியலின் எதிர்கால வளர்ச்சி தொடர்பாக விவாதிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு அறிவியல் சர்வதேச கருத்தரங்கத்தில் விளையாட்டு மருத்துவம் மற்றும் விளையாட்டு மறுவாழ்வு, விளையாட்டு நிர்வாகம் மற்றும் மேம்பாடு, ப்ரான்சைஸ் லீக்ஸ், விளையாட்டு பயோமெக்கானிக்ஸ், விளையாட்டு உடலியல், ஊட்டச்சத்து, உயர் செயல்திறன் விளையாட்டு பயிற்சி, விளையாட்டு தொழில்நுட்பம் மற்றும் இ-விளையாட்டு போன்ற சர்வதேச அளவில் விளையாட்டு துறை தொடர்பான முக்கிய தலைப்புகளை உள்ளடக்கிய குழு விவாதங்கள் பன்னாட்டு விளையாட்டு துறை நிபுணர்களால் நிர்வகிக்கப்பட உள்ளது. தமிழ்நாடு விளையாட்டு அறிவியல் சர்வதேச கருத்தரங்க நிகழ்வுகள் அனைத்தும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டர், யூடியூப் மற்றும் பேஸ்புக் சமூக ஊடக பக்கத்தில் நேரலை செய்யப்படும்.