தைபே சிட்டி: தைவான் தடகள ஓபன், 400 மீட்டர் தடை ஓட்டப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த இந்திய வீராங்கனை வித்யா ராம்ராஜ் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். சீன தைபேவில், தைவான் தடகள ஓபன் 2025 சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த, 400 மீட்டர் மகளிர் பிரிவு தடை ஓட்டப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த இந்திய வீராங்கனை வித்யா ராம்ராஜ், 56.53 நொடிகளில் போட்டி துாரத்தை கடந்து தங்கப்பதக்கம் வென்றார். நேற்று நடந்த ஈட்டி எறியும் போட்டியில் இந்திய வீரர் ரோகித் யாதவ், 74.42 மீட்டர் துாரம் ஈட்டி எறிந்து தங்கம் வென்றார். அதைத் தொடர்ந்து நடந்த 400 மீட்டர் ஆடவர் பிரிவு தடை தாண்டும் போட்டியில் இந்திய வீரர் யஷாஸ் பாலாக்ஷா 49.22 நொடிகளில் போட்டி துாரத்தை கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
800 மீட்டர் மகளிர் பிரிவு ஓட்டப்போட்டியில் இந்தியாவை சேர்ந்த பூஜா, 2:02.79 நிமிடத்தில் போட்டி துாரத்தை கடந்து தங்கப்பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனை டிவிங்கிள் சவுத்ரி, 2:06.96 நிமிடங்களில் கடந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார். ஆடவர் பிரிவு 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் இந்திய வீரர் கிருஷண் குமார் 1:48.46 நிமிட நேரத்தில் போட்டி துாரத்தை கடந்து தங்கம் வென்றார். ஆடவர் பிரிவு 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் இந்திய வீரர்கள் சந்தோஷ், விஷால், தரம்வீர் சவுத்ரி, டி.எஸ்.மனு, 3:05.58 நிமிடத்தில் கடந்து தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.