கிளாட்பெக்: ஜெர்மனில் நடந்த இளையோர் ஐடிஎப் ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த இந்திய வீராங்கனை மாயா ரேவதி ராஜேஸ்வரன் அபாரமாக வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளார். ஜெர்மனில் கிளாட்பெக் நகரில் இளையோர் ஐடிஎப் ஒபன் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் தமிழ்நாட்டு வீராங்கனை மாயா ரேவதி ராஜேஸ்வரன் பங்கேற்றார். முதல் சுற்றில் ஜெர்மனி வீராங்கனை சோபி டிரிக்வார்ட், 2வது சுற்றில் செர்பிய வீராங்கனை மாசா ஜென்கோவிச் ஆகியோரை வீழ்த்திய மாயா, காலிறுதிக்கு முன்னேறினார்.
தொடர்ந்து அபாரமாக ஆடிய மாயா, செக் குடியரசு வீராங்கனை சோஃபி ஹெட்லரோவாவை காலிறுதியிலும், பிரான்ஸ் வீராங்கனை டாப்னி எம்பெட்ஷியை அரையிறுதியிலும் வீழ்த்தி, இறுதி ஆட்டத்துக்குள் நுழைந்தார். இறுதி ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து வீராங்கனை நொலியா மான்டா உடன் மோதினார். இந்த தொடர் முழுவதும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மாயா, இறுதி ஆட்டத்திலும் அதே வேகத்தை தொடர்ந்தார். சிறப்பாக செயல்பட்ட மாயா, 6-2, 6-4 என நேர் செட்களில் நொலியாவை சாய்த்து, சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.