சென்னை: தமிழக காவலர் சேமநல நிதியில் இருந்து 355 காவலர்களின் குடும்பத்தினருக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் குழந்தைகளின் கல்வி தொகைக்கு என மொத்தம் ரூ.81 லட்சத்திற்கான உதவி தொகையை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் வழங்கினார். சென்னை மாநகர காவல் துறையில் பணிபுரியும் காவலர்கள் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரையிலான காவல்துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் உடல் நலம் பாதிப்படைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், அவர்கள் மேற்கொண்ட மருத்துவ சிகிச்சைக்கான தொகை தமிழ்நாடு காவலர் ேசம நல நிதியில் இருந்து வழங்கப்படுகிறது.
அதன்படி, காவலர் சேமநல நிதியில் இருந்து உதவி பெற விண்ணப்பித்திருந்த இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐ.,க்கள், தலைமை காவலர்கள், காவலர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் என மொத்தம் 117 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள், அலுவலர்களுக்கு தமிழ்நாடு காவலர் சேமநல நிதியிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக மொத்தம் ரூ.45,12,034 ஒதுக்கீடு செய்யப்பட்டு சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் அதற்கான உதவி தொகையை வழங்கினார். மேலும், சென்னை மாநகர காவல்துறையில் பணியின் போது உயிரிழந்த 4 காவலர்கள் குழந்தைகளுக்கு பள்ளி மற்றும் கல்லூரி படிப்பிற்கான கல்வி உதவி தொகை ரூ.48 ஆயிரம் மற்றும் 15 காவலர்கள் குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி உதவி தொகை ரூ.3,66,170மும் வழங்கினார்.
தமிழ்நாடு அரசால் வழக்கப்படும் கல்வி பரிசு தொகை 18 காவல் துறையினரின் குழந்தைகளுக்கு ரூ.51,500 மற்றும் 2021-22ம் ஆண்டிற்கான நூற்றாண்டு கல்வி உதவி தொகை 201 காவல் துறையினரின் குழந்தைகளுக்கு ரூ.31.27 லட்சம் என மொத்தம் ரூ.81,04,704 உதவி தொகையை கமிஷனர் ரத்தோர் வழங்கினார். இந்நிகழ்ச்சியின் போது, சென்னை மாநகர தலைமையிட கூடுதல் கமிஷனர் கபில் குமார் சரத்கர், துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன், நிர்வாக துணை கமிஷனர் சீனிவாசன், நவீன கட்டுப்பாட்டு அறை துணை கமிஷனர் மகேஸ்வரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.