சென்னை: தமிழ்நாடு அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டால் தான் எனக்கு எம்பிபிஎஸ் படிக்க வாய்ப்பு கிடைத்தது என்று பழ வியாபாரியின் மகள் கூறினார். தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சலிங் நேற்று தொடங்கியது. சிறப்பு பிரிவினர், அரசுப் பள்ளிகளில் படித்து 7.5% முன்னுரிமை இட ஒதுக்கீட்டின் கீழ் பங்கேற்ற பெரும்பாலான மாணவர்கள் கடந்த ஆண்டு கவுன்சலிங்கில் பங்கேற்று அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காமல், இந்த ஆண்டும் மீண்டும் நீட் தேர்வு எழுதி இரண்டாம் முறையாக மருத்துவ கவுன்சலிங்கில் பங்கேற்றனர்.
தரவரிசையில்(7.5%) முதல் 10 இடங்களை பிடித்தவர்கள் நேற்றைய கவுன்சலிங் பங்கேற்ற போது கூறியதாவது; மாணவி கிருத்திகா: நான் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையம் பெண்கள் மேனிலைப் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு வரை படித்தேன். நன்றாக படிப்பதை பார்த்து அந்த மாவட்டத்தின் ஆட்சியர் என்னை பிளஸ் 2 வகுப்பில் அந்த மாவட்டத்தில் உள்ள மாதிரிப் பள்ளியில் சேர்ந்து படிக்க வைத்தார். அதற்கு, பிறகு கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிகுறைவான மதிப்பெண் பெற்றேன். கடந்த ஆண்டு கவுன்சலிங்கில் மருத்துவ இடம் கிடைக்கவில்லை. பின்னர் இந்த ஆண்டும் நீட் தேர்வு எழுதி 569 மதிப்பெண்கள் பெற்றேன். இப்போது இரண்டாம் முறையாக பங்கேற்று சென்னை மருத்துவக்கல்லூரியில் இடம் எடுத்துள்ளேன்.
முருகன்: நான் சென்னையை அடுத்த குன்றத்தூர் பகுதியில் வசிக்கிறேன். அரசு ஆதிதிராவிடர் நல மேனிலைப் பள்ளியில் பிளஸ் 2 வரை படித்தேன். கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி குறைந்த மதிப்பெண் பெற்றதால் மருத்துவ கவுன்சலிங்கில் இடம் கிடைக்கவில்லை. இந்த ஆண்டும் நீட் தேர்வு எழுதி 560 மதிப்பெண் பெற்றேன். சென்னை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. மகிழ்ச்சியாக இருக்கிறது. பச்சையப்பன்: நான் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த மஞ்சநாயக்கன்ஹள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்தேன். பின்னர் பிள1, பிளஸ் 2 வகுப்புகளை தர்மபுரி மாங்கரை அரசு மேனிலைப் பள்ளியில் படித்தேன். கடந்த முறை நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் இடம் கிடைக்கவில்லை. இந்த ஆண்டு நீட் தேர்வில் 565 மதிப்பெண்கள் பெற்றேன். 7.5% சதவீத முன்னுரிமை இட ஒதுக்கீட்டு திட்டத்தின் கீழ் இந்த முறை சென்னை மருத்துவக் கல்லூரி கிடைத்துள்ளது.