அண்ணா பல்கலை மாணவி வழக்கில் 157 நாளில் மகளிர் கோர்ட் தீர்ப்பு வழங்கி இருப்பது தமிழக அரசின் சாதனையாக பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த டிச.23 அன்று 19 வயதான 2-ம் ஆண்டு பொறியியல் மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதேபகுதியில் பிரியாணி கடை நடத்தி வந்த கோட்டூரை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை மறுநாள்(டிச.24) கைது செய்தனர்.
இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து கடந்த டிச.28ம் தேதி உத்தரவிட்டது. கடந்த பிப்.24ம் தேதி ஞானசேகரனுக்கு எதிராக 100 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதன்பிறகு இந்த வழக்கு விசாரணை கடந்த மார்ச் 7-ம் தேதியன்று சென்னை மகளிர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. கடந்த ஏப்ரல் 8-ம் தேதியன்று குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது.
அதில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடல், ஆதாரங்களை அழித்தல், கல்லூரி மாணவியை சட்டவிரோதமாக கட்டுப்பாட்டில் வைத்திருந்து மிரட்டி நிர்வாணப்படுத்துதல், புகைப்படம் எடுத்து வெளியிடல் போன்ற பாலியல் குற்றங்களுக்காக தகவல் தொழில்நுட்பச் சட்டம், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் பிஎன்எஸ் சட்டத்தின் 11 பிரிவுகளின்கீழ் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்பாக கடந்த ஏப்.23 அன்று சாட்சி விசாரணை தொடங்கியது. தினந்தோறும் என்ற அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் காவல்துறை தரப்பில் 29 பேர் சாட்சியம் அளித்தனர்.
ஞானசேகரன் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் அரசு தரப்பில் 75 சான்று ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதற்கிடையில் தமிழ்நாடு அரசு மீது ஏதாவது களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என அதிமுக, சட்டமன்றத்திலும், வெளியிலும் போராட்டங்களை நடத்தி வந்தது. ஆனால் இவ்வழக்கில் உயர்நீதிமன்றமே, பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரணை நடத்தியதை ஏற்க அக்கட்சிக்கு மனமில்லை. இதன்மூலம் அரசியல் ஆதாயம் கிடைக்காதா? என எதிர்பார்த்து வந்த நிலையில் கடந்த மே 28-ம் தேதி சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி அளித்த தீர்ப்பில் ஞானசேகரன் குற்றவாளி என அறிவித்தார்.
தண்டனை விவரம் நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கு குறையாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் ஞானசேகரனுக்கு எந்த சலுகையும் வழங்கக்கூடாது என தீர்ப்பு வழங்கப்பட்டது. இவ்வழக்கின் தீர்ப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்றனர். தமிழ்நாடு முதல்வர் ஆட்சியில் பெண்களுக்கு துன்பம் விளைவிக்கும் எந்த குற்றவாளியும் தப்ப முடியாது என்பதற்கு அண்ணா பல்கலை வழக்கின் தீர்ப்பே சாட்சியாகும். இல்லாத சார்களை உருவாக்கி இழிவான அரசியல் செய்யும் ஒரே சார் ”பழனிசாமி சார்தான்” என்று அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் தொடர்ந்து சந்தேகம் எழுப்பும் அதிமுகவுக்கு திமுக பதிலடி கொடுத்துள்ளது. இதுபோன்று மலிவு அரசியல் செய்யாமல் 157 நாளில் அதிகபட்ச தண்டனையை பெற்று தந்த மகளிர் நீதிமன்றத்தையும், தமிழக அரசையும் பாராட்ட வேண்டும் என பெண்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.