ஈரோடு: தமிழ்நாடு அரசு மீதும், தமிழ்நாட்டு மக்கள் மீதும் ஒன்றிய அரசு அரசியல் யுத்தத்தை பகிரங்கமாக மேற்கொண்டுள்ளதாக முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார். ஈரோட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: நாட்டில் ஒரு அரசியல் பதட்டம், ஒன்றிய அரசாங்கத்தின் நடவடிக்கை மூலமாக ஏற்பட்டிருப்பது கவலைக்குரியது. ஒன்றிய அரசு தமிழ்நாடு மக்கள் மீதும், தமிழ்நாடு அரசு மீதும் அரசியல் யுத்தத்தை மேற்கொண்டிருக்கிறது. பகிரங்கமாக இந்த யுத்தம் நடந்து வருகிறது. ஒரு கட்சியினுடைய, ஒரு அமைப்பினுடைய கொள்கையை எல்லோரும் ஏற்றுதான் ஆக வேண்டும் என்று கூறுவது சர்வாதிகாரத்தின் உச்சம்.
ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு கல்வி கொள்கை பின்பற்றப்படுகிறது. தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கை பின்பற்றப்படுகிறது.
எந்தெந்த மாநிலங்களில் மும்மொழி பின்பற்றப்படுகிறது. இந்தி மொழி பேசப்படும் மாநிலங்களில் 3வதாக ஏதாவது ஒரு மொழி பின்பற்றப்படுகிறதா? சட்டப்பூர்வமாக அமல்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தமிழர்கள் மீது வன்மையான வார்த்தைகளை பேசிய ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் அல்லது பிரதமர் நரேந்திர மோடி அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே ஆட்சி, ஒரே கட்சி என்ற பாசிச நிலைக்கு கொண்டு போவதற்கு ஒன்றிய பாஜ அரசு முயற்சிக்கிறது. இது ஒட்டுமொத்த நாட்டிற்கும், ஜனநாயகத்திற்கும் ஆபத்து. இவ்வாறு முத்தரசன் கூறினார்.