சென்னை: தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாள் நவம்பர் 13ம் தேதியும் (திங்கள்) விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. வழக்கமாக தீபாவளி வார நாட்களில் வரும். இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், மாணவர்களுக்கு அன்றைய தினம் விடுமுறை விடப்படும். அதுவும் தீபாவளிக்கு அடுத்த நாள் வெள்ளி, சனி, ஞாயிறு என்றால் தொடர் விடுமுறை கிடைக்கும். ஆனால், இந்தமுறை தீபாவளி பண்டிகை நவம்பர் 12ம் தேதி அதாவது வருகிற ஞாயிற்றுக்கிழமை வருவதால், வார இறுதிநாளில் கிடைக்கும் ஞாயிறு விடுமுறையோடு தீபாவளி கொண்டாட்டம் முடிந்துவிடும்.
இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் வெளியூர் செல்பவர்கள் பாடு திண்டாட்டமாக இருக்கும். இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை தீபாவளி என்பதால் மறுநாள் திங்கட்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். பொதுமக்கள், அரசு அலுவலர்கள், மாணவர்கள் நலன் கருதி விடுமுறை அளிக்க வேண்டும் என்று அந்த கோரிக்கையில் கேட்டுக் கொண்டனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று, தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அளிப்பது குறித்து அரசு சார்பில் ஆலோசனை நடத்தியது.
இந்த ஆலோசனைக்கு பிறகு தமிழக அரசு நேற்று மாலை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது: இந்த ஆண்டு தீபாவளியை 12-11-2023 (ஞாயிறு) அன்று கொண்டாடும் பொருட்டு, சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனை கருத்தில் கொண்டு 13ம் தேதி (திங்கள்) அன்று ஒரு நாள் மட்டும் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும். அந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வருகிற 18ம் தேதி (சனி) பணி நாளாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிடுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.