சென்னை: நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஒன்றிய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதுகுறித்து நடிகரும், தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் நேற்று வெளியிட்ட அறிக்கை வருமாறு: ஒன்றிய அரசு நடத்தும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்ந்த சாதிவாரி கணக்கெடுப்பானது, உண்மையான சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்போடு சேர்த்து, வெறும் கண்துடைப்பு சாதிவாரி தலைக்கட்டு கணக்கெடுப்பாக நடத்தக்கூடாது, அனைத்து வகுப்பினருக்கும் இடஒதுக்கீடு மற்றும் உள்ஒதுக்கீடு முறையாக கிடைக்கப்பெறும் வகையில் நடத்த வேண்டும்.
இதற்கென்று அனைத்து சமூகத்தின் பிரதிநிதிகளும் உள்ளடங்கிய ஒரு பிரத்யேக ஆணையம் அல்லது குழு அமைக்க வேண்டும். மக்களவை தொகுதிகளுக்கான மறுசீரமைப்பை நோக்கமாக கொண்டு இந்த கணக்கெடுப்பு நடத்தப்படக்கூடாது. ஒன்றிய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்திருந்தாலும், மாநில அரசும் தங்களுக்கான அதிகாரங்களை பயன்படுத்தி, தன்னிச்சையாக சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வு நடத்த வேண்டும்.
இதன்மூலம் மக்களின் சமூக, கல்வி, பொருளாதார நிலை உள்ளிட்டவை குறித்த தரவுகள் முழுமையாக சேகரிக்கப்படும்.
இடஒதுக்கீடு தொடர்பான பல வழக்குகளில் உச்ச நீதிமன்றம் கேட்டுள்ள விகிதாச்சார பிரதிநிதித்துவம் மற்றும் வகுப்புகளின் சமூக, வாழ்வாதார, பொருளாதார, கல்வி, வேலைவாய்ப்பு உள்பட அனைத்திலும், எந்தெந்த நிலைகளில் தற்போது பின்தங்கி இருக்கின்றனர் என்பதற்கான சரியான தரவுகள் மற்றும் தற்போதைய சமூக நிலை உள்ளிட்டவற்றின் விவரங்களை அதில் சேகரிக்க வேண்டும். எனவே, தமிழ்நாடு அரசும் சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வு நடத்த வேண்டும். இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.