சென்னை: அரிக்கொம்பன் யானையின் தற்போதைய நிலைப் பற்றிய தகவலை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அரிக்கொம்பன் யானை, தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் இருந்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், மேல்கோதையாறு வனச்சரகத்திற்குட்பட்ட குட்டியார் அணை அருகே அடர்ந்த வனப்பகுதியில் 06.06.2023 அன்று விடப்பட்டது. அரிக்கொம்பன் யானையானது நிபுணர் குழுவின் தொடர் கண்கானிப்பில் உள்ளது.
அரிக்கொம்பனின் தற்போதைய நிலைப் பற்றிய தகவல்: 19.08.2023 மற்றும் 20.08.2023 ஆகிய தினங்களில் களக்காடு கோட்டத்தின் துணை இயக்குநர், சூழலியலாளர் மற்றும் முன் கள பணியாளர்கள் குழுவினருடன் மேல்கோதையாறு பகுதியில் யானையை கண்காணித்தனர். யானையானது சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதை கண்டறிந்தனர். மேலும், உணவு மற்றும் தண்ணீர் நன்றாக உட்கொள்வதை நிபுணர் குழு கண்டறிந்தனர்.
மேலும் ரேடியோ காலரில் இருந்து பெறப்படும் சிக்னல் மூலம் யானையின் நடமாட்டம் தொடர்ந்து களப்பணியாளர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அரிக்கொம்பன் இருக்கும் இடத்தில் பிற யானைக்கூட்டங்கள் சுற்றித்திரிவது கண்டறியப்பட்டது. அரிகொம்பன் யானையினை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் விடப்பட்டு 75 நாட்கள் முடிவடைந்த நிலையில், தனது இரண்டாம் வசிப்பிடத்தில் ஆரோக்கியமாக காணப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.