சென்னை: மறைந்த தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூய் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூய் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) இரவு 9 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 84. வயது மூப்பு காரணமாக, உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் அவர் காலமானார்.
அரபு மொழி மற்றும் இலக்கியத்தில் எம்.ஏ., எம்.பில்., பி.எச்.டி. பட்டங்கள் பெற்றுள்ளார். இவர் தலைமை காஜியாக பதவியேற்பதற்கு முன்பாக கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியுள்ளார். இந்த நிலையில் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூய் சாகிபு மறைவெய்தியதையொட்டி, அவரின் இல்லத்திற்கு நேற்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
அப்போது அமைச்சர் பி.கே.சேகர்பாபு, டி.ஆர்.பாலு எம்பி, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் தலைவர் துறைமுகம் காஜா, தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் துணை தலைவர் இறையன்பன் குத்தூர் ஆகியோர் உடன் இருந்தனர். இதே போல தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூய் மறைவுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, மமக தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.