சென்னை: எழும்பூர் ஹாக்கி அரங்கில் முன்னாள், மூத்த வீரர்கள், வீராங்கனைகளுக்கான முதலாவது மாஸ்டர்ஸ் கோப்பை ஹாக்கிப் போட்டி நடக்கிறது. பெண்களுக்கான அரையிறுதி ஆட்டங்கள் நேற்று காலை நடந்தது. முதல் அரையிறுதியில் தமிழ்நாடு-ஒடிசா பெண்கள் அணிகள் மோதின. ஒடிசா அணி முதல் 10 நிமிடங்களில் 2 கோல்களை அடுத்தடுத்து அடித்தது. கேப்டன் எக்க லுசிலா 4வது நிமிடத்திலும், சரிதா ரோஷன் 9வது நிமிடத்திலும் கோல்களை அடித்தனர். தொடர்ந்து, 25 நிமிடத்தில் கேப்டன் எக்கா, 30வது நிமிடத்தில் அசிமா சஞ்ஜெய் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தார்.
இதனால் முதல் பாதியின் முடிவில் ஒடிசா 4-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. 2வது பாதியில் ஆட்டத்தின் 34வது நிமிடத்தில் பெனால்டிக் கார்னர் வாய்ப்பில் சவுமியா கோலாக மாற்றி தமிழ்நாட்டின் கோல் கணக்கை தொடங்கினார். தொடர்ந்து தமிழ்நாடு கோல் அடிக்க முயற்சித்தும் முடியவில்லை. ஆட்ட நேர முடிவில் ஒடிசா 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்று இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.
தொடர்ந்து நடந்த 2வது அரையிறுதியில் அரியானா-பஞ்சாப் அணிகள் களம் கண்டன. அதில் பஞ்சாப் 3-2 என்ற கோல் கணக்கில் அரியானாவை அடக்கியது. இன்று பிற்பகல் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ஒடிசா-பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. முன்னதாக காலையில் நடக்கும் 3வது இடத்துக்கான ஆட்டத்தில் தமிழ்நாடு-அரியான அணிகள் களம் காண உள்ளன.