சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளதால் இணையதள முன்பதிவு செய்து போட்டிகளில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் ‘தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை’ விளையாட்டு போட்டிகள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான இணையதள முன்பதிவு ஆன்லைன் மூலம் 4.8.2024 முதல் https://sdat.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.
முன்பதிவு செய்ய கடைசி நாள் 25.8.2024. மாவட்ட மற்றும் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் செப்டம்பர் 10 முதல் துவங்கப்பட உள்ளதால் பள்ளி, கல்லூரி மாணவ – மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுப்பிரிவு மற்றும் அரசு ஊழியர்கள் அடங்கிய அனைத்து பிரிவினரும் உடனடியாக இணையதளத்தில் முன்பதிவை விரைந்து செய்து விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கலாம்.
மாணவ – மாணவிகள் தாங்களாகவோ, தங்கள் பள்ளி, கல்லூரி மூலமாகவோ முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாவட்ட விளையாட்டு அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். ‘ஆடுகளம்’ தகவல் தொடர்பு மையத்தை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 9514000777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.