சென்னை: சென்னையில் நடந்து வரும் ஹாக்கி இந்தியா மாஸ்டர்ஸ் கோப்பைக்கான காலிறுதிப் போட்டியில் நேற்று, தமிழக அணி 8-2, என்ற கோல் கணக்கில் பஞ்சாப் அணியை வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்தது.
சென்னையில் மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி ஸ்டேடியத்தில் ஹாக்கி இந்தியா மாஸ்டர்ஸ் கோப்பைக்கான ஹாக்கி போட்டிகள் கடந்த 18ம் தேதி முதல் நடந்து வருகின்றன. இப்போட்டிகளின் தொடர்ச்சியாக, நேற்று நடந்த முதலாவது காலிறுதிப் போட்டியில் தமிழகம் – பஞ்சாப் அணிகள் மோதின. போட்டியின் துவக்கம் முதல் துடிப்புடன் செயல்பட்ட தமிழக வீரர்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் பஞ்சாப் வீரர்கள் திணறினர்.
போட்டியின் 10வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட தமிழக அணி வீரர் சுதர்சன் அபாரமாக கோலடித்து கணக்கை துவக்கி வைத்தார். அதன் பின், போட்டியின் 12, 20, 38, 43, 47, 53, 55வது நிமிடங்களில் தமிழக வீரர்கள் சீரான இடைவெளியில் கோல் மழை பொழிந்தனர். இவற்றில் 4 கோல்கள் தமிழக வீரர் முத்துசெல்வனால் போடப்பட்டவை. இடையில், 30, 40வது நிமிடங்களில் மட்டும் பஞ்சாப் அணி 2 கோல்களை போட்டது. அதனால், 8-2 என்ற கோல் கணக்கில் தமிழக அணி அபார வெற்றி பெற்று அரை இறுதிக்குள் நுழைந்தது. மற்றொரு காலிறுதிப் போட்டியில், ஆந்திரா அணியை, 5-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஒடிசா அணி, அரை இறுதிக்கு முன்னேறியது.