புதுடெல்லி: நீர்பங்கீடு விவகாரத்தில் ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை ஏற்பதாக தெரிவித்த காவிரி நீர் மேலாண்மை ஆணையம், அடுத்து 15 நாளுக்கு விநாடிக்கு 5ஆயிரம் கன அடி தண்ணீரை காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு திறந்து விட வேண்டும் என்று கர்நாடகாவுக்கு உத்தரவிட்டுள்ளது. காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடகா அரசுக்கு எதிராகவும், அதேப்போன்று காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு எதிராகவும் தமிழ்நாடு அரசு தொடர்ந்த அவசர மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு,தமிழ்நாடு அரசு தொடர்ந்த அவசர மனு மீது மூன்று நாட்களில் முடிவெடுக்க வேண்டும் என கடந்த 18ம் தேதி உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து மேற்கண்ட உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் காவிரி ஒழுங்காற்று குழுவின் கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் நேற்று முன்தினம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற்றது. இதில் தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுவை ஆகிய நான்கு மாநில அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இதையடுத்து கூட்டத்தின் முடிவில், ‘‘காவிரியில் இருந்து 15 நாட்களுக்கு விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு திறந்து விட வேண்டும் என்று கர்நாடகா அரசுக்கு ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்தது. இதையடுத்து கூட்டத்தில் எடுக்கப்பட்ட அனைத்து விவரங்களையும் அறிக்கையாக காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு நேற்று முன்தினம் மாலையே, ஒழுங்காற்று குழு தரப்பில் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 23வது கூட்டம் டெல்லியில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நேற்று நடந்தது. இதில் தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுவை ஆகிய மாநில அரசு அதிகாரிகள் நேரில் கலந்து கொண்டனர். ஆனால் கர்நாடகா மாநில அதிகாரிகள் மட்டும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்து கொண்டனர். இதையடுத்து கூட்டத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் கலந்து கொண்ட அதிகாரிகளான நீர்வளத்துறை தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா மற்றும் காவிரி தொழில்நுட்ப தலைவர் சுப்ரமணியன் ஆகியோர், ‘‘காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை ஏற்கமுடியாது. தமிழ்நாட்டில் குறுவை சாகுபடியில் பயிரிடப்பட்டுள்ள நெல் பயிரை பாதுகாக்க விநாடிக்கு 24ஆயிரம் கன அடி தண்ணீர் என கணக்கிட்டு அடுத்த பத்து நாட்களுக்கு தொடர்ந்து காவிரியில் இருந்து நீர் திறக்க கர்நாடகா அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
மேலும் கடந்த இரு மாதங்களில் வழங்க வேண்டிய நீரில் நிலுவையில் இருக்கும் 45.05டி.எம்.சி தண்ணீரையும் உடனடியாக திறந்து விட வேண்டும். அப்போது தான் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு அது பயனுள்ளதாக அமையும். மேலும் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு 5ஆயிரம் கன அடிக்கு குறைவாக தான் தற்போது தண்ணீர் வருகிறது. இதில் முன்னதாக திறந்து விட்ட அளவை விட தற்போது கர்நாடகா அரசு குறைத்து விட்டது. அதேப்போன்று கர்நாடகா அணையில் இருந்து திறக்கக்கூடிய உபரி நீரையும் அம்மாநில அரசு இரண்டாயிரம் கன அடிக்கும் கீழாக அம்மாநில அரசு குறைத்து விட்டது. அதனால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி தமிழ்நாட்டுக்கு மாதந்தோறும் வழங்க வேண்டிய காவிரி நீர் பங்கீட்டை திறந்து விட உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கர்நாடகா அரசு அதிகாரிகள்,‘‘காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டு அரசின் கோரிக்கையை ஏற்க முடியாது. ஏனெனில் கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் நீர் தேக்கங்களில் தற்போது போதிய தண்ணீர் கிடையாது. மாநிலத்திலும் பருவ மழை வழக்கத்தைவிட 47 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. அதனால் மாநிலத்தில் இருக்கும் நான்கு காவிரி அணைகளும் போதிய அளவில் நிரம்பவில்லை. மேலும் மழைக்கான முன்னறிவிப்பும் தற்போது வரையில் வெளியாகவில்லை. இதுபோன்ற சூழலில் தமிழ்நாடு கேட்கும் நீரை காவிரியில் இருந்து கொடுத்தால் கர்நாடகாவில் குடிநீருக்கே பிரச்சனை ஏற்படும் என தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட தமிழ்நாட்டு அதிகாரிகள் நாள் ஒன்றுக்கு 7500 கன அடி தண்ணீராவது தொடர்ந்து 15 நாட்களுக்கு வழங்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்தினர்.
ஆனால் அதனையும் நிராகரித்த கர்நாடகா அதிகாரிகள் 3000 கன அடி தண்ணீருக்கு மேல் கண்டிப்பாக கொடுக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து புதுவை மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களும் தங்களது தரப்பு கோரிக்கைகளை காவிரி ஆணையத்தின் முன்னிலையில் வைத்தனர். இதையடுத்து அனைத்து தரப்பு கோரிக்கைகளையும் கேட்ட காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் பிறப்பித்த உத்தரவில், ‘‘காவிரி நீர் பங்கீடு விவகரத்தில் ஒழுங்காற்று குழுவின் பரிந்துரை ஏற்கப்படுகிறது. எனவே அதனை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாட்டுக்கு நாள் ஒன்றுக்கு 5000 கன அடி தண்ணீரை அடுத்த 15 நாட்களுக்கு கர்நாடகா மாநிலம் காவிரியில் இருந்து திறந்து விட வேண்டும் என தெரிவித்தார். இதையடுத்து நாளை மறுநாள் இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது, நீர் பங்கீடு விவகாரத்தில் வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டது தொடர்பாக தமிழ்நாட்டு அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வாதங்களை முன்வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.