நெல்லை: சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் 253 வது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அவரது மணிமண்டபத்தில் இருக்கும் முழு உருவ சிலைக்கு தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு, நாடாளுமன்ற திமுக குழு தலைவர் மற்றும் திமுக துணைப்பொது செயலாளர் கனிமொழி, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து கனிமொழி எம்.பி., அளித்த பேட்டி: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியில் தான் ஒண்டி வீரன் மணிமண்டபம் அமைக்கப்பட்டது.
திமுக ஆட்சியில் அருந்ததிய சமுதாயத்திற்கான மூன்று சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் சிலரால் வழக்கு தொடர்ந்த போதிலும் அந்த வழக்கில் மிகப்பெரிய வெற்றியை முதலமைச்சர் பெற்று கொடுத்துள்ளார். வாக்களித்தவர்களுக்கும் வாக்களிக்காதவர்களுக்கும் பாரபட்சம் இல்லாமல் உழைக்கக்கூடிய அரசாக செயல்படுகிறது. ஒன்றிய அரசின் பட்ஜெட்டில், அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு ஒதுக்க கூடிய நிதி ஒதுக்கப்படவில்லை. மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதியும் ஒதுக்கப்படவில்லை.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நிதி முதல்வரால் கேட்டும் அது கிடைக்கப்பெறவில்லை என எதுவும் கிடைக்காத நிலையில், தமிழ்நாட்டுக்கு ஒன்றுமே செய்யாத ஒன்றிய அரசுடன் எப்படி நெருக்கமாக இருக்க முடியும்? பாஜக உடனான திமுகவின் அணுகுமுறையில் எந்த மாற்றமும் இல்லை. மக்களிடம் பழகும் போது எளிமையாக அன்பாக பழகக் கூடியவர் முதலமைச்சர். அதே வேளையில் தமிழ்நாட்டு மக்களின் உரிமைக்காக போராடும்போது தலைவர் கலைஞரைப் போல் உறுதியாக இருப்பார். இவ்வாறு அவர் கூறினார்.