சென்னை: தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்கியுள்ளது. மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான மருத்துவக் கலந்தாய்வு இன்று முதல் ஆகஸ்ட் 29 வரை நடைபெறும். சிறப்பு பிரிவினர், 7.5% இட ஒத்துக்கீட்டு மாணவர்களுக்கு நாளை கலந்தாய்வு நடைபெறவுள்ளது. பொதுப்பிரிவில் இடம்பெற்றுள்ள 28,819 மாணவர்கள் tnselection.org மூலம் விண்ணப்பிக்கலாம். இன்று முதல் ஆகஸ்ட் 27 மாலை 5 மணி வரை மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளை தேர்வு செய்யலாம். தமிழ்நாட்டில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் சேர்க்கைக்கான முதல் சுற்றுக் கலந்தாய்வு விவரங்களை மருத்துவக் கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. பொதுப் பிரிவில் இடம் பெற்றுள்ள மாணவர்கள், இன்று காலை 10 மணி முதல் 27ஆம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைன் மூலமாக கலந்தாய்வில் பங்கேற்று, தாங்கள் விரும்பும் கல்லூரிகளை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவக் கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இன்று காலை 10 மணிக்கு என்ற www.tnmedicalselection.org இணையதளம் மூலமாக தரவரிசை ஒன்று முதல் 28 ஆயிரத்து 819 வரையில் இடம் பெற்றுள்ள விண்ணப்பதாரர்கள், அரசு ஒதுக்கீட்டில் உள்ள இடங்களுக்கு நீட் தேர்வு மதிப்பெண்கள் 720 முதல் 127 வரையில் பெற்றுள்ளவர்களும், நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள இடங்களுக்கு, நிர்வாக ஒதுக்கீட்டிற்கான தரவரிசை எண் 1 முதல் 13 ஆயிரத்து 417 வரையில், நீட் தேர்வு மதிப்பெண் 715 முதல் 127 வரையில் பெற்றுள்ளவர்களும் தாங்கள் விரும்பும் கல்லூரிகளை 27ஆம் தேதி மாலை 5 மணி வரை பதிவு செய்யலாம். அதனைத்தொடர்ந்து, 28 ஆம் தேதி மாணவர்களுக்கு சீட் ஒதுக்கீடு செய்யப்படும். 29 ஆம் தேதி தற்காலிக முடிவுகள் வெளியிடப்பட்டு, 30 ஆம் தேதி இறுதி ஒதுக்கீட்டு ஆணைகள் வெளியிடப்படும். மேலும், இறுதி ஒதுக்கீட்டு உத்தரவுகளை பெற்றவர்கள் செப்டம்பர் 5 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் சேர வேண்டும்.
மருத்துவப்படிப்பில் இடம் பெற்றவர்கள் அரசு ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக்கல்லூரி மற்றும் தனியார் பல்கலைக் கழகங்களில் இடம் பெற்றவர்கள் ரூ.30 ஆயிரம் வைப்புத்தொகையாக செலுத்த வேண்டும். நிர்வாக ஒதுக்கீட்டில் இடம் தேர்வு செய்தவர்கள் ரூ.1 லட்சம் வைப்புத்தொகையாக செலுத்த வேண்டும்.தொடர்ந்து, நாளை அரசு பள்ளி மாணவர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத்திறனாளி மாணவர்கள், விளையாட்டு பிரிவு மாணவர்கள் ஆகியோருக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நேரடி முறையில் சென்னை ஓமந்தூரார் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் நடைபெறுகிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் ஒன்று முதல் 1,007 வரையில் நீட் தேர்வு மதிப்பெண் 669 முதல் 442 வரையில் பெற்றவர்கள் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டுள்ளனர். பிசிஎம் பிரிவில் இடஒதுக்கீட்டு தரவரிசையில் 29 முதல் 60 வரையிலும், எஸ்சி தரவரிசையில் 99 முதல் 202 வரையிலும், எஸ்சிஏ பிரிவில் தரவரிசையில் 29 முதல் 50 வரையிலும், எஸ்டி தரவரிசையில் 3 முதல் 15 வரையில் பெற்ற மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.