சென்னை: திவ்யதேசம் பெருமாள் திருக்கோயில்கள் ஒரு நாள் சுற்றுலாவிற்கு முன்பதிவு நடைபெறுகிறது என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார். சென்னையில் திவ்யதேசம் பெருமாள் திருக்கோயில்கள் ஒரு நாள் சுற்றுலா பயணத்திட்டம்-1 ல் சென்னை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்படும் பேருந்து திருவல்லிக்கேணி பார்த்த சாரதி திருக்கோயில், பெசன்ட் நகர் அஷ்டலெஷ்மி திருக்கோயில், திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் திருக்கோயில், மாமல்லபுரம் ஸ்தல சயன பெருமாள் திருக்கோயில், சிங்கபெருமாள்கோவில் பாடலாத்ரி நரசிம்மர் திருக்கோயில், திருநீர்மலை நீர்வண்ண பெருமாள் திருக்கோயில் ஆகிய கோயில்களுக்கு சென்று மாலை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தை வந்தடையும்.
சென்னையில் திவ்யதேசம் பெருமாள் திருக்கோயில்கள் ஒரு நாள் சுற்றுலா பயணத்திட்டம் -2 ல் சென்னை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்படும் பேருந்து திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயில், திருநீர்மலை நீர்வண்ண பெருமாள் திருக்கோயில், திருமழிசை ஜகன்னாத பெருமாள் திருக்கோயில், திருவள்ளூர் வைத்திய வீர ராகவ பெருமாள் திருக்கோயில், பெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில், பூந்தமல்லி வரதராஜ பெருமாள் திருக்கோயில் ஆகிய கோயில்களுக்கு சென்று மாலை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தை வந்தடையும். திவ்யதேசம் பெருமாள் திருக்கோயில்கள் ஒரு நாள் சுற்றுலாவிற்கு சென்னை வாலாஜா சாலை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக முன்பதிவு மையத்தில் நேரடியாகவும், வலைதள முகவரி www.ttdconline.com மூலமாகவும் முன்பதிவு நடைபெற்று வருகிறது. மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கட்டணமில்லா தொலைபேசி எண்: 180042531111 மற்றும் தொலைபேசி எண்கள் 044-25333333, 044-25333444 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.