சென்னை: ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையான 3 மாதங்களில் மட்டும் தமிழகத்தில் உள்ள அனைத்து வகையான சுற்றுலா தளங்களுக்கும் 40,248 பேர் சுற்றுலா மேற்கொண்டுள்ளனர் என சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன் தகவல் தெரிவித்தார். சென்னை வாலாஜா சாலையில் அமைந்துள்ள சுற்றுலாத்துறை அலுவலகத்தில் சுற்றுலா பயண பேருந்துகள் மற்றும் ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகளின் அறைகள் பதிவு செய்வதற்கான புதுப்பிக்கப்பட்ட முன்பதிவு மையத்தை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன் நேற்று திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை இயக்குநர் சந்தீப் நந்தூரி மற்றும் சுற்றுலா அலுவலர்கள் உடனிருந்தனர். பின்னர் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன் கூறுகையில்: 2023 ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையான 3 மாதங்களில் மட்டும் 40,248 நபர்கள் சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்தாண்டு 2023-24 நிதிநிலை அறிக்கையில் திருப்பதி சுற்றுலா மற்றும் பிற சுற்றுலாக்களை இயக்குவதற்கு ஏற்படும் கூடுதல் தேவைகளை பூரத்தி செய்ய ரூ.2.80 கோடி செலவில் 43 இருக்கைகளுடன் கூடிய இரண்டு குளிர்சாதன வால்வோ சொகுசு பேருந்துகள் வாங்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.