சென்னை: அனைத்து பத்திரப்பதிவு சேவை கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது நாளை முதல் அமலுக்கு வருகிறது. வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்ட அறிக்கை: தமிழக பத்திர பதிவுத்துறையில் அளிக்கப்படும் சேவைகளுக்கான கட்டணங்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மாற்றவில்லை. எனவே, பதிவுத்துறையால் வழங்கப்பட்டு வருகிற ஆவண பதிவு செய்யப்படும் ஆவணத்தினை பாதுகாத்தல், மின்னணு சாதனத்திலிருந்து ஆவண நகல்கள் வழங்குதல் போன்ற சேவைகளைப் பொருத்து கட்டணங்களை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் பதிவுச்சட்டம், 1908ன் பிரிவு 78ல் கட்டண விவர அட்டவணையிலுள்ள 20 இனங்களுக்கான கட்டண வீதங்களும் சில ஆவணப் பதிவுகளுக்கான பதிவு மற்றும் முத்திரை கட்டண வீதங்களும் திருத்தி அமைக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, ரசீது ஆவணத்துக்கு பதிவு கட்டணம் ரூ.20லிருந்து ரூ.200 எனவும், குடும்ப நபர்களுக்கு இடையேயான செட்டில்மென்ட், பாகம் மற்றும் விடுதலை ஆவணங்களுக்கு அதிகபட்ச பதிவு கட்டணம் ரூ.4,000லிருந்து ரூ.10,000 எனவும், அதிகபட்ச முத்திரை தீர்வை ரூ.25,000லிருந்து ரூ.40,000 எனவும், தனி மனை பதிவிற்கான கட்டணம் ரூ.200லிருந்து ரூ.1,000 எனவும், குடும்ப உறுப்பினர்கள் அல்லாத பொது அதிகார ஆவணங்களுக்கு பதிவுக் கட்டணம் ரூ.10,000 என்று இருப்பதை சொத்தின் சந்தை மதிப்பிற்கு ஒரு சதவீதம் என மாற்றியமைப்பது உள்ளிட்டவை இதில் அடங்கும். இது ஜூலை 10 முதல் நடைமுறைக்கு வருகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆவண எழுத்தர் நல நிதியக்குழுவில் 4 புதிய ஆவண எழுத்தர்கள் உறுப்பினர்களாக நியமனம்: வணிகவரி மற்றும் பதிவுத்துறை வாயிலாக தமிழ்நாடு ஆவண எழுத்தர் நலநிதியக்குழு கடந்த 2022ம் ஆண்டு டிசம்பரில் நிறுவப்பட்டது. பதிவுத்துறை தலைவர் தமிழ்நாடு ஆவண எழுத்தர் நல நிதிய குழுவில் உறுப்பினர்கள் நியமிப்பது குறித்த கருத்துருவை அரசுக்கு அனுப்பினார். அதனை ஏற்று 2022ம் ஆண்டு தமிழ்நாடு ஆவண எழுத்தர் நல நிதிய விதிகளில், விதியின்படி தமிழ்நாடு ஆவண எழுத்தர் நல நிதியக்குழுவில் திருப்பூரை சேர்ந்த பத்மநாபன், மதுரையை சேர்ந்த கண்ணன், ராமநாதபுரத்தை சேர்ந்த முத்துக்குமார், தூத்துக்குடியை சேர்ந்த சிவசங்கரன் ஆகிய ஆவண எழுத்தர்களை உறுப்பினர்களாக 3 ஆண்டுகளுக்கு நியமனம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.