சென்னை: தமிழகத்தில் இன்றும், நாளையும் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட 2 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் இதுவரை இல்லாத அளவுக்கு இருந்து வருகிறது. அக்னி நட்சத்திரம் என்ற கத்தரிவெயில் தொடங்குவதற்கு முன்பே மாநிலத்தின் உள்மாவட்டங்களில் பல இடங்களில 100 டிகிரியை கடந்து வெப்ப அலை வீசியது. இதனால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினர். இதற்கிடையில் சென்னையில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பிற்பகல் 12 மணிக்கு மேல் வெளியில் செல்ல முடியாத அளவுக்கு சுட்டெரித்தது.
தொடர்ந்து பிற்பகல் 4 மணி வரை வெயில் வாட்டி எடுத்தது. இதனால், சென்னைவாசிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். வெயிலின் தாக்கத்ததால் பிற்பகலில் அத்தியாவசிய தேவையை தவிர, அநாவசியமாக வெளியில் செல்வதை தவித்தனர். வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுபடவும், கடற்கரை காற்றை வாங்குவதற்காக நேற்று மாலை 5 மணிக்கு மேல் சென்னை மெரினா கடற்கரை, பெசன்ட்நகர் கடற்கரையை நோக்கி படையெடுக்க தொடங்கினர். நேரம் ஆக, ஆக கடற்கரை பகுதிகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இந்த நிலையில் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் பா.செந்தாமரை கண்ணன் கூறியதாவது: தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இன்றும், நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 18, 19ம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 20ம் தேதி மற்றும் 21ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதே போல இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2° செல்சியஸ் உயரக்கூடும். 18ம் தேதி மற்றும் 19ம் தேதி தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை சற்று குறையக்கூடும். இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு ஏற்படும். அதே நேரத்தில் இன்று முதல் 19ம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3° அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக வேலூரில் 38.4° செல்சியஸ் வெயில் பதிவானது. குறைந்தபட்சமாக கரூர் பரமத்தி 19.0° செல்சியஸ் வெயில் பதிவானது. தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பெரும்பாலான இடங்களில் பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது. ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2-3° செல்சியஸ் அதிகமாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.