சென்னை: தமிழ்நாடு அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் அனுமதியோடு தமிழ்நாடு முழுவதும் இயங்கி வரும் தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் பயிற்சி மையங்கள் மூலம் பயிலும் மாணவர்களுக்கு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வருகின்றது. கடந்த 60 ஆண்டு காலமாக நீடித்து வந்த பழைய பாடத்திட்ட முறையில் மாற்றம் செய்து புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அரசின் இந்த முடிவை எதிர்த்து குன்றத்தூரை சேர்ந்த அனிதா என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி என்.மாலா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் சி.ஜெயபிரகாஷ் ஆஜராகி, பதில் மனு தாக்கல் செய்தார்.
அதில், நான்கு ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் அமைக்கப்பட்ட கல்வியாளர்கள் மற்றும் பயிற்சி மைய பிரதிநிதிகள் அடங்கிய குழுவில் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்ட புதிய பாடத்திட்டம் மற்றும் கல்வித் தகுதி உள்ளிட்ட மாற்றத்தை குறித்து கருத்துக்கு கேட்கப்பட்டது. இறுதியாக இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் தேவையான மாற்றங்களை மற்ற மாநிலங்களில் நடைபெறும் தேர்வுகளுக்கு இணையாக தமிழ்நாடு அரசு தனது பாடத்திட்டத்தை மாற்றி அமைத்து உள்ளது என்று கூறப்பட்டிருந்தது. அரசு தரப்பின் இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி உள்ள நிலையில் இந்த மனுவை மனுதாரர் தாக்கல் செய்துள்ளார். இது தேர்வுக்காக தயாராகி உள்ள மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும். அரசின் கல்வி சார்ந்த கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. எனவே இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார்.