சென்னை : வானிலை முன் அறிவிப்பை வலுப்படுத்த 50 கோடி ரூபாய் செலவில் ரேடார் கருவிகளை வாங்க தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத் துறை டெண்டர் கோரியுள்ளது. வானிலை நெகிழ்வுகளை துல்லியமாக கண்காணிப்பதில் நிலவும் தாமதத்தால் பெரும் பொருட்சேதம் மற்றும் உயிர் சேதம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த ஆண்டு எதிர்பாராத பெருமழை வெள்ளத்தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு,நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிப்பிற்கு உள்ளாகின.
இதனை தவிர்க்கும் வகையில், தமிழ்நாட்டிற்கு பிரத்யேக வானிலை முன் அறிவிப்பு தொழில்நுட்பங்கள் உருவாக்கப்படும் என்று 2024-2025ம் ஆண்டு பொது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதற்கட்டமாக ராமநாதபுரம் மற்றும் ஏற்காடு இடங்களில் ரூ. 50 கோடி செலவில் டாப்ளர் ரேடார் கருவிகள் அமைக்கப்பட உள்ளன. இந்த நிலையில் டாப்ளர் ரேடார் கருவிகளை கொள்முதல் செய்ய, தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை துறை டெண்டர் கோரியது. டெண்டர் இறுதி செய்யப்பட்டதும் 2 இடங்களிலும் ரேடார்கள் நிறுவப்படும் என்று பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.