சென்னை: தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாதவரம் தொகுதி பொன்னியம்மன் மேடு அருகில் உள்ள புனித அன்னாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்தது. சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ தலைமை வகித்தார். 200க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டன.
முகாமில் சென்னை மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்து ஆண், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் என 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங் பார்மசி பொறியியல் படித்தவர்கள் வரை ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான நிறுவனத்தின் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து கொடுத்தனர். தொடர்ந்து நிறுவனங்களில் பணி செய்ய தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தொழிலாளர் நலன்-திறன் மேப்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் பணி நியமன ஆணையை வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில்,‘தமிழ்நாடு தொழில் துறை சார்பில் 278வது முறையாக மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்தியாவில் எங்கும் இதுபோல் நடைபெற்றதில்லை. இதுவரை நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 2 லட்சத்து 31 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு 3771 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது’ என்றார்.


