சென்னை: தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதியில் எந்த மாற்றமும் இல்லை என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி, கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ம் தேதி அனைத்து அரசுப் பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன.
தமிழகத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் பத்தாம் வகுப்பு, பிளஸ்1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்தன. அதற்கு பிறகு ஏப்ரல் இறுதிக்குள் அனைத்து கீழ் வகுப்புகளுக்கான தேர்வுகளும் நடத்தி முடிக்கப்பட்டு மே 1ம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. தற்போது மாணவ, மாணவியர் கோடை விடுமுறையில் உள்ளனர்.
இந்நிலையில், தமிழகத்தில் அக்னி நடசத்திரம் என்னும் கத்திரி வெயில் தொடங்கியுள்ளது. இது 25ம் தேதி விலகும் என்றும் எதிர்பார்க்கபடுகிறது. இதற்கிடையே, தமிழகத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. இந்த ஆண்டில் கோடைவெயிலின் அதிகபட்ச அளவு 106 டிகிரி வரை சென்றுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கோடை வெயில் மேலும் நீடிக்கவும் வாய்ப்புள்ளதால், பள்ளி மாணவ, மாணவியர் ஜூன் மாதம் பள்ளிக்கு வருவதில் சிரமம் இருக்கும் என்று பெற்றோர் கருதுகின்றனர்.
அதன் பேரில், பள்ளிகள் திறப்பது ஒத்தி வைக்கப்படுமா என்று கடந்த வாரம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரிடம் கேட்டபோது, கோவை வெப்பம் குறித்து ஆய்வு செய்து தெரிவிக்க வல்லுநர் குழு இருக்கிறது. அந்த குழுவினர் வெயில் தாக்கம் மற்றும் அது தொடர்பான பிரச்னை குறித்து அரசுக்கு தெரிவிப்பார்கள். அதன் பேரில் முதல்வர் முடிவு எடுத்து அறிவிப்பார் என்று அமைச்சர் பதிலளித்து இருந்தார். ஆனால், கோடை காலத்தில் வெயிலுக்கு பதிலாக வெப்பச் சலன மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து பல்வேறு இடங்களில் இயல்பு நிலையில் வெப்பம் நீடித்து வருகிறது. அதன் காரணமாக பள்ளிகள் திறப்பது குறித்து ஆய்வு செய்த பள்ளிக்கல்வித்துறை, வரும் ஜூன் 2ம் தேதியே பள்ளிகளை திறக்கலாம் என்று முடிவு எடுத்துள்ளது.
வெயில் குறித்து பாதிப்பு இருந்தால் அதுகுறித்து முதல்வர் வழங்கும் ஆலோசனைக்கு பிறகு முடிவுகள் எடுக்கவும் பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் தனியார் பள்ளிகளும் ஜூன் 2ம் தேதி பள்ளிகளை திறப்பது ஏற்ப தயார் நிலையில் பள்ளிகளை வைக்க வேண்டும் என்றும் அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப்பணிகளை மேற்கொண்டு, கழிப்பிட வசதிகள், குடிநீர் வசதிகள் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. அதன் பேரில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு தொடக்க கல்வி இயக்குநர் நரேஷ் சுற்றறிக்கையும் அனுப்பியுள்ளார். இதையடுத்து ஜூன் 2ம் தேதி வழக்கம் போல பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிகிறது.