சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாட்கள் நடந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய நடந்த சிறப்பு முகாமில் 6 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். இதில் புதிதாக பெயர் சேர்க்க மட்டும் 4 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தது. தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த மாதம் 27ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 11 லட்சத்து 31 ஆயிரத்து 197 வாக்காளர்கள் உள்ளனர்.
இதில் ஆண் வாக்காளர்கள் 3,00,68,610 பேரும், பெண் வாக்காளர்கள் 3,10,54,571 பேரும் மூன்றாம் பாலினத்தவர் 8,016 பேரும் உள்ளனர். இதைதொடர்ந்து தமிழகத்தில் கடந்த 27ம் தேதி முதல் வருகிற டிசம்பர் 9ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அலுவலகம் செல்வோர் வசதிக்காக நவம்பர் 4, 5ம் தேதி மற்றும் நவம்பர் 18ம் தேதி மற்றும் நவம்பர் 19ம் தேதி ஆகிய 4 நாட்கள் சிறப்பு முகாம்கள், அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள 68,154 வாக்குச்சாவடி மையங்களில் கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் சிறப்பு முகாம் காலை முதல் மாலை வரை நடந்தது. அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் இந்த பணிகள் நடந்தது. முகாமில், 18 வயது முடிந்தவர்கள் மற்றும் 18 வயது முடிந்தும் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தங்கள் பெயரை சேர்க்க ஆர்வம் காட்டினர். அதேபோன்று, வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பெயர் இருந்தால் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம், ஆதார் எண்ணை இணைக்கவும் சிறப்பு முகாமில் வசதி செய்யப்பட்டிருந்தது. சிறப்பு முகாமில் பெயர் சேர்க்க, நீக்கம், திருத்தம் செய்ய 6 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இதில், வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க மட்டும் சுமார் 4 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று கூறியதாவது: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் நீக்கம் செய்வதற்கு கடந்த சனி, ஞாயிறு நடந்த சிறப்பு முகாமில் பொதுமக்களிடம் இருந்து சிறப்பான ஆதரவு கிடைத்துள்ளது. அதன்படி, கடந்த சனி மற்றும் ஞாயிறு அன்று தமிழகம் முழுவதும் சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4 லட்சத்து 7 ஆயிரத்து 100 பேரும், வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க 762 பேரும், நீக்கம் செய்ய 36,368 பேரும், இடமாற்றம் மற்றும் முகவரி மாற்றம் செய்ய 1,55,882 என மொத்தம் 6,00,112 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்களை, வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் வீடு வீடாக வந்து ஆய்வு செய்வார்கள். அவர்கள் அளித்த தகவல்கள் உறுதி செய்யப்பட்டு, தகுதியான வாக்காளர்கள் பெயர்கள் இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். சிறப்பு முகாம் வருகிற 18, 19ம் தேதியும் நடைபெறும். தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற ஜனவரி 5ம் தேதி வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார். சிறப்பு முகாம் வருகிற 18, 19ம் தேதியும் நடைபெறும். தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 5ம் தேதி வெளியிடப்படும்.