சென்னை : வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தை நோக்கி நகர்வதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை மேலும் தீவிரம் அடையத் தொடங்கியுள்ளது. அதன் காரணமாக வங்கக் கடல் பகுதியில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவான வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வட தமிழக கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும், பிற பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்தது. அந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி அதே இடத்தில் நீடித்து வந்த நிலையில், நேற்று மதியம் 2.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு திசையில் நகர்ந்துள்ளது.
மேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வருகிறது. மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் வட தமிழ்நாடு, அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழைக்கு வாய்ப்பு என்பதால் இன்று முதல் 18-ம் தேதி வரையில் தமிழ்நாட்டிற்கு மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் இன்று முதல் 3நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கர்நாடகாவில் நாளை முதல் 2 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வயநாடு இடைத்தேர்தல் நடைபெற உள்ள கேரளாவில் நாளை முதல் 6 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சென்னை மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, அடையாறு, அண்ணா சாலை, எழும்பூர் புதுப்பேட்டை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை முதலே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.