சென்னை: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் 31ம் தேதி வரை பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் மற்றும் கோடை மழைக்குப் பிறகு சில நாட்கள் மழை பெய்வதும், சில நாட்கள் கடும் வெயிலுமாக வானிலை நிலவுகிறது. ஆவணி மாதம் தொடங்கி இருக்கும் நிலையில், பல பகுதிகளில் தற்போதே பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. கடந்த வாரம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள், வட மாவட்டங்கள், கொங்கு பகுதிகளில் நல்ல மழை பெய்தது. தற்போதும் காலையில் லேசாக வெயில் இருந்தாலும் மாலைக்கு மேல் பலத்த காற்றுடன் பொழிவு இருக்கிறது. இதனால் குளிர்ச்சியான காலநிலை நிலவி வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கேரளா, தெற்கு கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதன் காரணமாக தென்னிந்தியப் பகுதிகளின் மேல் வளி மண்டல காற்று சுழற்சி தொடர்ச்சியாக நீடித்து வருகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் தென் மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் மழை நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் 31ம் தேதி வரை பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது. அதேபோன்று, நாளை முதல் 31ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் வரும் 31ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று முதல் ஆக. 29ம் தேதி வரை மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். வங்கக்கடல் பகுதிகளில் இன்று வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், தென்மேற்கு, மத்திய மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே மீனவர்கள் இந்த பகுதிகளில் இன்று மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.