சென்னை: தமிழக கடலோரப் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டு இருப்பதால், டெல்டா மாவட்டங்கள் உள்பட 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து 6 நாட்களுக்கு மழை கொட்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.வட கிழக்கு பருவமழையின் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. குறிப்பாக 3 மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று சில இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக மீஞ்சூர், பொன்னேரி பகுதிகளில் நேற்று கன மழை பெய்தது.
வெப்பநிலையை பொருத்தவரையில் மதுரை, நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் 95 டிகிரி வெயில் இருந்தது. பிற மாவட்டங்களில் சராசரியாக 90 டிகிரி வெயில் இருந்தது.
இந்நிலையில் தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டு இருந்தது. அது தற்போது மேற்கு நோக்கி நகர்ந்து டெல்டா பகுதியில் நிலை கொண்டுள்ளது. அதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும்.
இதையடுத்து அந்தமான் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்று சுழற்சி மேற்கு நோக்கி நகர்ந்து வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. டெல்டா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்று சுழற்சியும் மேற்கு நோக்கி நகரும் போது 8, 9 மற்றும் 10ம் தேதிகளில் 15 மாவட்டங்களிலும், கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. இதையடுத்து, இன்றும் நாளையும் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளிலும், மத்திய மேற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளிலும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளிலும் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.
மேலும் 11, 12ம் தேதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து 6 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்னையில் மழை நீர் தேங்காமல் இருக்கும் பணிகள் ஏற்கனவே முடியும் தருவாயில் உள்ளதால், பணிகளை விரைந்து முடிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. ஆனாலும் மழை வந்தால் சமாளிக்க அனைத்து ஏற்பாடுகளையும் சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக அரசு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.