சென்னை: தமிழ்நாட்டின் பகுதிகளின் மேல்நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் நீடித்து வரும் வறண்ட வானிலை காரணமாக வெப்ப சலனம் ஏற்பட்டு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக நேற்று, மேற்கு தாம்பரத்தில் 110 மிமீ மழை பெய்துள்ளது. காஞ்சிபுரம், உத்தண்டி, செங்கல்பட்டு 100 மிமீ, சத்யபாமா பல்கலை 90 மிமீ, திருவொற்றியூர், முகலிவாக்கம், 80 மிமீ மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக பாளையங்கோட்டை, கரூர் பகுதியில் 104 டிகிரி வெயில் கொளுத்தியது. இந்நிலையில், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், வெப்ப சலனம் காரணமாகவும் தமிழ்நாட்டில் இன்று முதல் 28ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.