சென்னை: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி தீவிரம் அடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதன் காரணமாக அரபிக்கடல் பகுதியில் இருந்து மேற்கு திசை காற்றை தமிழகம் வழியாக இது ஈர்க்கும் என்பதால் தமிழகத்தில் 30ம் தேதி வரை அதீத மழை பெய்யும் வாய்ப்புள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் நீலகிரி, கோவை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும் தேனி மாவட்டத்தில் அனேக இடங்களிலும் மழை பெய்துள்ளது.
குறிப்பாக நீலகிரி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்துள்ளது. அதேபோல கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் ஒடிசா கடலோரப் பகுதிகளை ஒட்டிய வட மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, நேற்று அதிகாலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்று அதே பகுதியில் நிலை கொண்டுள்ளது.
இது மெல்ல வடக்கு திசையில் நகர்ந்து வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. மேற்கண்ட இந்த நிகழ்வின் காரணமாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப் பகுதிகள், தென்காசி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் நேற்று பெய்தது.
இதையடுத்து, இன்றும் நாளையும் நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஒருசில இடங்களில் கனமுதல் அதி கனமழையும், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப் பகுதிகள், தேனி, தென்காசி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், தமிழக கடலோரப் பகுதிகளை பொறுத்தவரையில் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும். 31ம் தேதி மற்றும் ஜூன் 1ம் தேதிகளில் தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடாப் பகுதி, குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 60 கிமீ வேகத்தில் வீசும்.
வங்கக் கடலில் அனேக பகுதிகளிலும், அதை ஒட்டிய தென் வங்கக் கடல் மற்றும் வடகிழக்கு வங்கக் கடல் பகுதிகளிலும் சூறாவளிக்காற்று மணிக்கு 65 கிமீ வேகத்திலும், ஆந்திர கடலோரப் பகுதிகள், இதர தெற்கு மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 60 கிமீ வேகத்திலும் வீசும் என்பதால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு 31ம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.