சென்னை: வடக்கு ஆந்திர மற்றும் தெற்கு ஒடிசா பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கோடை காலத்தை போன்று கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில் நேற்று இரவு லேசான மழை பெய்தது. அதனை தொடர்ந்து தற்போது சென்னை புறநகர் பகுதிகளில் பரவலான மழை பெய்து வருகிறது.
தாம்பரம், பூந்தமல்லி, மதுரவாயல், வளசரவாக்கம், போரூர், குன்றத்தூர், மாங்காடு போன்ற பகுதிகளிலும் செம்பரம்பாக்கம், திருவேற்காடு போன்ற பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக சில பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. மாலை நேரத்தில் மழை பெய்து வருவதால் மாணவர்களுக்கு சற்று சிரமம் ஏற்பட்டுள்ளது.
சென்னை மட்டுமன்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. திருவள்ளூரில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக வெயில் வதைத்து வந்த நிலையில் தற்போது மழை பெய்துவருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதாக பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.