புதுடெல்லி: தமிழ்நாடு,புதுச்சேரி, கேரளா ஆகியவற்றின் சட்ட பேரவை தேர்தல்களையொட்டி இந்த ஆண்டு இறுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது: அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழகம்,மேற்கு வங்கம் ஆகிய 5 சட்டமன்றங்களின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே, ஜூன் மாதங்களில் முடிவடைகிறது.
இதையொட்டி இந்த மாநிலங்களில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கப்படும். பீகார் சட்ட பேரவைக்கு இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடக்க உள்ளதால் அந்த மாநிலத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி உடனே தொடங்கப்படும். பேரவை தேர்தலில் பாஜவுக்கு உதவும் வகையில் வாக்காளர் தரவுகளில் முறைகேடுகள் நடைபெற்றுளன என்று தேர்தல் ஆணையம் மீது எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது.
இதையடுத்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்காமல் தடுக்கும் வகையில் கூடுதல் நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் ஒரு பகுதியாக, பிழைகள் இல்லாத வாக்காளர் பட்டியலை உறுதி செய்வதற்காக, தேர்தல் அதிகாரிகள் வீடு வீடாகச் சரிபார்ப்பை மேற்கொள்வார்கள்.
வாக்காளர்களாக சேர விரும்பும் அல்லது மாநிலத்திற்கு வெளியே இருந்து இடம்பெயரும் விண்ணப்பதாரர்களுக்கு என புதிய அறிவிப்பு படிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் ஜூலை 1, 1987க்கு முன்பு இந்தியாவில் பிறந்ததற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். அதே போல் அவர்களுடைய தாய், தந்தையர் பிறந்த இடம், பிறந்த தேதி ஆகியவற்றிற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு தேர்தல் அதிகாரிகள் கூறினர்.