சென்னை: தமிழ்நாட்டின் முதல் குழந்தை எலும்பியல் மருத்துவம், விபத்து மற்றும் அவசர கால சிகிச்சைகளுக்கான சிறப்பு சிகிச்சை மையத்தை சென்னை அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை தொடங்கி உள்ளது. சென்னையில் உள்ள அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை தமிழ்நாட்டின் முதல் குழந்தை எலும்பியல் மருத்துவம், விபத்து மற்றும் அவசர கால சிகிச்சைகளுக்கான சிறப்பு சிகிச்சை மையத்தை தொடங்கி உள்ளது. குழந்தைகள் விளையாட்டில் அடையும் வழக்கமான காயங்கள் முதல் பிறக்கும் போதே இருக்கும் சிக்கலான நிலைமைகள் வரை, சிறப்பு எலும்பியல் சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளுக்கான மாநிலத்தின் முதன்மையான சிகிச்சை மையமாக இது செயல்படும்.
அப்போலோ மருத்துவமனையின் சென்னை வளாகத்தில் அனுபவம் வாய்ந்த குழந்தை எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள், விபத்து மற்றும் அவசர கால சிகிச்சை நிபுணர்கள் மற்றும் மறுவாழ்வு பராமரிப்பு குழுக்களை இந்த சிறப்பு சிகிச்சை மையம் ஒரே தளத்தில் ஒன்றிணைக்கிறது. அப்போலோ மருத்துவமனை குழந்தை மருத்துவத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதற்கு அடையாளமாக இந்த குழந்தை எலும்பியல் மருத்துவம், அவசர கால சிகிச்சை மையம் அமைந்திருக்கிறது.
மேலும் தென்னிந்தியா முழுவதிலும் குழந்தைகளின் எலும்பு மற்றும் மூட்டு பிரச்னைகளுக்கான சிறப்பு சிகிச்சை நிபுணர்களுக்கு அதிகரித்து வரும் தேவையை இம்மையம் பூர்த்தி செய்யும் விதமாக செயல்படும். பிறவியிலேயே இருக்கும் எலும்பு சார்ந்த பிரச்னைகள் மற்றும் வளர்ச்சி கோளாறுகள், மூட்டு குறைபாடுகள், நரம்புத்தசை பிரச்னைகள், காயங்கள், தொற்றுகள் மற்றும் குழந்தைகளின் எலும்புகள் மற்றும் மூட்டுகளைப் பாதிக்கும் கட்டிகள் உள்ளிட்ட குழந்தை எலும்பியல் மருத்துவ நிலைமைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் இந்த சிறப்புக்குழு நிபுணத்துவம் பெற்றது. இந்த சிகிச்சைகளில் முதுகெலும்பு குறைபாடுகள் மற்றும் நடப்பதில் இருக்கும் வழக்கத்திற்கு மாறாக இருக்கும் பிரச்னைகளுக்கும் தீர்வுகள் இருக்கின்றன.