சென்னை: லாரி தொழிலை பாதுகாக்க தமிழகத்தில் காலாவதியான 26 சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும் என லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் ஆர்.முனிரத்தினம் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: தமிழகத்தில் 7 லட்சம் லாரி உரிமையாளர்கள் உள்ளனர். இவர்களை காப்பாற்றும் வகையில், தமிழகத்தில் காலாவதியான 26 சாவடிகளை அகற்ற ஒன்றிய அரசுக்கு முதல்வர் கோரிக்கை வைக்க வேண்டும். தமிழகத்தில் செங்கல்பட்டிலிருந்து மீஞ்சூர் வரை 60 கி.மீக்கு 6 சுங்கச் சாவடிகள் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ளன. செங்கல்பட்டிலிருந்து மாதவரத்திற்கு 5 சுங்கச் சாவடிகள் உள்ளன. சென்னைக்கு அருகே உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளையும் அகற்ற வேண்டும். இதே கோரிக்கை மனு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலுவுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.