Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மதுரை மக்களின் பொழுதுபோக்கிற்காக ரூ.50 கோடியில் அழகுபெறும் வண்டியூர் கண்மாய்

மதுரை: பொதுமக்கள் பொழுது போக்குவதற்காக வண்டியூர் கண்மாய் பகுதி அழகாகி வருகிறது. ரூ.50 கோடியிலான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மதுரை மாநகராட்சியில் மொத்தம் 72 வார்டாக இருந்தது. கடந்த 2011ம் ஆண்டு அக்டோபரில் 17 ஊராட்சிகளை இணைத்து மொத்தம் 100 வார்டுகளாக அதிகரிக்கப்பட்டது. இதன் மூலம் மாநகராட்சி பரப்பளவு 51.82 சதுரகிலோ மீட்டரிலிருந்து 147.997 சதுர கி.மீ.க்கு அதிகரித்துள்ளது. மக்கள் தொகையும் 10.50லட்சத்திலிருந்து 14.70 லட்சமாக உயர்ந்துள்ளது. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டு பகுதிகளில் தூய்மைப்பணிகள், புதிய சாலை குடிநீர் குழாய் பதித்தல், பாதாள சாக்கடை திட்டப் பணிகள், மழைநீர் வடிகால் கட்டமைப்பு. தெருவிளக்குகள் பராமரிப்பு, பள்ளிக்கட்டிடங்கள் புனரமைப்பு, மருத்துவமனைகள் மேம்பாட்டு பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவற்றை கமிஷனர் தினேஷ்குமார் ஆய்வு செய்து வருகிறார். இந்நிலையில் மதுரை மாநகராட்சியில் மக்களின் பொழுதுபோக்கிற்கு என்று பொதுஇடங்கள் இல்லை. இதனால் பொதுமக்கள் பூங்காக்களில் கூட்டமாக சென்று குடும்பத்துடன் பொழுதை கழித்து வருகின்றனர். இந்நிலையில் மதுரை மக்கள் பொழுது போக்க மதுரை மாநகராட்சி சார்பில் வண்டியூர் கண்மாயினை அழகுப்படுத்த வேண்டும் என்று சட்டமன்றத்தில் வடக்கு தொகுதி எம்எல்ஏ கோ.தளபதி பேசினார். இதை ஏற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் அழகுப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் பணிக்காகவும் அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு நிதியின் கீழ் ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு,

கண்மாயில் படகுசவாரி வசதிகள் ஏற்படுத்துதல், கண்மாயின் மேற்குப்புறம் மற்றும் வடபுறத்தில் இருசக்கர மிதிவண்டி பாதை அமைத்தல், நடைபயிற்சி பாதை அமைத்தல், ஸ்கேட்டிங் தளம், கராத்தே பயிற்சி மையம், இறகு பந்து மைதானம், வாகன நிறுத்துமிடம், நவீன கழிப்பிடம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பூங்காக்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் பூங்காவை அழகுபடுத்தும் பணிகள் 50 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. மீதமுள்ள பணிகள் விரைந்து முடிந்த பிறகு வண்டியூர் கண்மாய் பகுதி தனித்துவமான இடமாக மாறி விடும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.