Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

குஜிலியம்பாறை, ஒட்டன்சத்திரத்தில் டூவீலர் சாகசத்தில் இளைஞர்கள்...அசுர வேகத்தில் பஸ்கள்

*விபத்துக்களை தடுக்க கிடுக்கிப்பிடி உத்தரவிட கோரிக்கை

குஜிலியம்பாறை/ ஒட்டன்சத்திரம் :குஜிலியம்பாறை சாலையில் டூவீலரில் அதிவேகமாக ஓட்டிச் செல்லும் இளைஞர்கள் சாகசத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் சாலையில் நடமாட பொதுமக்கள் அச்சம் அடைகின்றனர். போலீசார் வாகன தணிக்கை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.திண்டுக்கல்-கரூர் மாநில நெடுஞ்சாலையின் மையப்பகுதியில் குஜிலியம்பாறை உள்ளது. வாகன போக்குவரத்து அதிகளவு உள்ள இவ்வழித்தடம் இருவழிச்சாலையாக இருந்து வந்தது.

இதையடுத்து வாகன போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கிலும், வாகன விபத்துக்களை தடுக்கும் விதமாக திண்டுக்கல்-கரூர் மாநில நெடுஞ்சாலை வழித்தடத்தில் திண்டுக்கல்லில் இருந்து குஜிலியம்பாறை வழியாக மாவட்டத்தின் எல்லை முடிவு டி.கூடலூர் வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டது.

நான்கு வழிச்சாலை நடுவே சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளது. குஜியம்பாறை கடைவீதி சாலையில் பொதுமக்கள் நடமாட்டமும், வாகன போக்குவரத்தும் அதிகளவில் உள்ளது. இந்நிலையில் இச்சாலையில் டூவீலரில் செல்லும் இளைஞர்கள் அதிவேக மின்னல் வேத்தில் ஓட்டிச் செல்கின்றனர். இதுமட்டுமின்றி ஒரு டூவீலரில் மூன்றுக்கு அதிகமானோர் அமர்ந்து, ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு சாலையில் சாகசத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் டூவீலர் ஓட்டிச் செல்லும் பெரும்பாலான இளைஞர்களுக்கு ஓட்டுநர் உரிமம் ஏதும் இல்லை.

இதுமட்டுமின்றி, டூவீலர்களுக்கும் ஆர்.சி.புக், இன்ஸ்யூரன்ஸ் போன்ற முறையான ஆவணங்கள் ஏதும் இல்லாமல் உள்ளது. மேலும் மது அருந்தி விட்டு டூவீலர்களை அதிவேக மின்னல் வேகத்தில் ஓட்டுகின்றனர்.குஜிலியம்பாறை கடைவீதி மெயின்ரோட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியும், பஸ் ஸ்டாண்டு சாலையில் தனியார் நர்சரி பள்ளியும் உள்ளது. இப்பள்ளிக்கு குழந்தைகளை அழைத்து செல்லும் பெற்றோர்கள், அதிவேக டூவீலர்களை கண்டு அச்சம் அடைகின்றனர்.

டூவீலரில் அதிவேகமாக செல்லும் இளைஞர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இளைஞர்களின் இச்செயலால், சாலையில் டூவீலர் ஓட்டிச் செல்லும் பொதுமக்களும், சாலையில் நடந்து செல்லும் மக்களும் ஒருவித விபத்து அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே பள்ளிக் குழந்தைகள், பொதுமக்கள் பாதுகாப்பு கருதி குஜிலியம்பாறையில் போலீசார் வாகன தணிக்கை செய்து, அதிவேகமாக செல்லும் டூவீலர்களை பறிமுதல் செய்தும், வாகன அபராதம் விதித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

* ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் டைமிங் பிரச்னையால் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களின் தகராற்றினால் தினமும் மக்கள் பயணம் செய்ய முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்திற்கு பழநி, திண்டுக்கல், திருச்சி, மதுரை, திருப்பூர், தேனி, சென்னை, கோவை, கேரளா, பெங்களுர் உள்பட பல்வேறு நகரங்களுக்கு தினமும் அரசு பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் வந்து செல்கின்றது.

மார்க்கெட் கூலித் தொழிலாளர்கள், அரசு அலுவலகங்களுக்கு வேலைக்கு செல்வோர், கிராமப்புறத்திலிருந்து மார்க்கெட்டிற்கு வந்து செல்லும் விவசாயிகள் என தினமும் ஏரளமான பொதுமக்கள் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் வந்து செல்கின்றனர். பேருந்து நிலையத்தில், அலுவலக நேரமான காலை, மாலை நேரங்களில் திண்டுக்கல்-பழநி செல்லும் அரசு பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் போட்டி போட்டுக்கொண்டு ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டும், அதிவேகமாகவும் செல்கின்றனர்.

மேலும் அரசு பேருந்திற்கும், தனியார் பேருந்திற்கும் டைமிங் பிரச்னை ஏற்படுவதால் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு வருவதும், பேருந்து நிலையத்தில் பேருந்துக்களை குறுக்கே நிறுத்திக்கொண்டு ஓட்டுனர்களும், நடத்துனர்களும் தகராற்றில் ஈடுபடுவதுமாக உள்ளனர். மேலும் அவர்களது பேருந்துகளின் ஏர் ஹாரன்களை அதிகளவில் அலறவிட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக டைமிங் பிரச்னையால் ஓட்டுனர்களும், நடத்துனர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டும், அசிங்கமான வார்த்தைகளால் திட்டுவதுமாக உள்ளனர். இதனால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. நேற்று முன்தினம் வழக்கம்போல் நடைபெறும் டைமிங் பிரச்சனையால இரண்டு தனியார் பேருந்து,ஓட்டுநர்கள், நடத்துனர்கள் பேருந்தை குறுக்கே போட்டு தகராறில் ஈடுபட்டனர். இதனால் பேருந்தில் இருந்த பயணிகளும் பேருந்திற்கு காத்திருந்த பொதுமக்களும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர்.

இதுகுறித்து பயணிகள் கூறுகையில், தனியார் பேருந்துகள் அதிகளவில் டைமிங் பிரச்னையால் தகராறில் ஈடுபட்டு காவல் நிலையம் வரை சென்று வருகின்றனர். எனவே ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் நிரந்தரமாக காவலர்களை நியமித்து டைமிங் பிரச்னையை சரி செய்தும், தடை செய்யப்பட்ட ஏர் ஹாரன்களை பறிமுதல் செய்ய வேண்டும்’’ என்றனர்.

விதிமுறைகளை கடைபிடித்தால் விபத்தில்லை!

‘பளபள’ சாலையில் வேகம் அறிந்த ஓட்டுனர்கள் பலர், விதிமுறைகளை அறியாதது வேதனையே. இதனால் அவர்களும், அவர்களுக்கு சற்றும் தொடர்பில்லாத, அதே வழியில் வரும் பிற வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்குகின்றனர். சாலை விபத்துகள் அதிக அளவில் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது வாகனங்கள் அதிவேகத்தில் செல்வது தான் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் உள்ள தனியார் பஸ்களில் வேகக்கட்டுப்பாடு கருவி பொருத்தப்பட்டு, பஸ்களின் வேகம் மணிக்கு 90 கிலோ மீட்டருக்குள் செல்ல வேண்டும் என உத்தரவு உள்ளது. ஆனால், தேனி மாவட்டத்தில் சிலர் விதிமுறைகளை கடைபிடிக்காததாலும், வேகக்கட்டுப்பாடு உத்தரவை முறையாக செயல்படுத்தாததாலும் விபத்துகள்அதிகரித்து கொண்டே இருக்கிறது.கம்பம் பகுதியில், ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அதி வேகத்தில் செல்லும் தனியார் பஸ்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

எனவே வேகக்கட்டுப்பாட்டு கருவியால் ஏற்படும் பலன்கள் குறித்து போக்குவரத்து போலீசார் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி தனியார் பஸ் டிரைவர்களை மிதமான வேகத்தில் செல்ல செய்ய வேண்டும். அப்போது தான் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க முடியும் என சமூகஆர்வலர்கள் கூறுகின்றனர்.