Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காவிரியில் தண்ணீர் வந்ததால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் நேரடி நெல் விதைப்பு பணிகளை விவசாயிகள் துவங்கினர்

நாகப்பட்டினம் : காவிரி டெல்டா மாவட்ட பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட்டதை தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு உள்ளிட்ட வேளாண் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.கர்நாடக அரசு தண்ணீர் தராததால் நடப்பு ஆண்டு ஜூன் மாதம் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியவில்லை. இதனால் குறுவை சாகுபடி பொய்த்து போனது. இந்நிலையில் சம்பா சாகுபடியாவது தப்பி பிழைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. இதன்காரணமாக கர்நாடக அரசு உபரி நீரை தமிழ்நாட்டிற்கு திறந்து விட்டது. மேட்டூர் அணை முழு கொள்ளவை எட்டியதால் காவிரி டெல்டா மாவட்ட பாசனத்திற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வேளாண் பணிகளை தொடங்கியுள்ளனர். இதன்படி நாகப்பட்டினம் மாவட்டத்தில் 1 லட்சத்து 60 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி மேற்கொள்ள இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. காவிரி டெல்டா மாவட்டத்தின் கடைமடை மாவட்டமான நாகப்பட்டினத்தில் விவசாயிகள் சம்பா சாகுபடி பணிகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர். குறிப்பாக திருக்குவளை, திருப்பூண்டி, மீனம்பநல்லூர், வாழக்கரை, மடப்புரம், எட்டுக்குடி, வலிவலம், கருங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் டிராக்டர் கொண்டு உழவுப் பணி, வயல் வரப்புகளை சீரமைத்தல், பாசன வாய்க்கால்களை தூர்வாருதல் போன்ற பணிகளை தொடங்கியுள்ளனர். இதை தொடர்ந்து விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்தல் உள்ளிட்ட பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

குறுவை பொய்து போன நிலையில் சம்பா சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு உரம், விதைகள் ஆகியவற்றை தட்டுப்பாடு இன்றி மானிய விலையில் வழங்க வேண்டும், சம்பா தொகுப்பு திட்டத்தை பின்னேர்ப்பு மானியமாக அறிவிக்க வேண்டும். புதிய விவசாய கடன்கள் வழங்க வேண்டும். நாகப்பட்டினம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாசன வாய்க்கால் மற்றும் ஆறுகளில் நடந்து வரும் பாலம் உள்ளிட்ட கட்டுமான பணிகளை நிறுத்திவிட்டு விரைவாக கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் பாசன வாய்க்காலில் வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து கலெக்டர் ஆகாஷ் கூறியதாவது: நாகப்பட்டினம் மாவட்டத்தில் தற்பொழுது சம்பா நெல் சாகுபடிக்கு விவசாயிகள் ஆயத்த பணிகளை தொடங்கி உள்ளனர். எனவே நாகப்பட்டினம் மாவட்டத்தில் சம்பா சாகுபடிக்கு நீண்ட மற்றும் மத்திய கால விதை நெல் ரகங்களை விதைக்க வேண்டும். மாவட்டத்தில் இதுவரை நீண்ட மற்றும் மத்திய கால விதை ரகங்கள் 450 மெட்ரிக் டன்கள் வேளாண்மை துறை மூலமாக விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை நீர் மற்றும் வடகிழக்குப் பருவ மழையின் மூலம் பெறப்படும் தண்ணீரைக் கருத்தில் கொண்டு தற்போதுள்ள சூழலில் நீண்ட மற்றும் மத்திய கால ரகங்களை விவசாயிகள் விதைப்பது ஏற்றதாகும். இதன் மூலம் வடகிழக்குப் பருவ மழையின் பாதிப்புக்கு பயிர் உள்ளாகாமல் நல்ல மகசூலை பெறமுடியும்.TKM 13, ADT 51, CR 1009 Sub 1, IR 20, ADT 54, ADT 52 , Co 52 , TRY 4 N போன்ற நீண்ட மற்றும் மத்திய கால விதை நெல் ரகங்கள் 450 மெட்ரிக் டன்கள் அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.