சென்னை : சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த வாடகை கார் ஓட்டுநர் ராஜ்குமாரின் வங்கி கணக்கில் 9 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் ஆன சம்பவம் நபரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பழனியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் கோடம்பாக்கத்தில் தனது நண்பருடன் தங்கி கார் ஒட்டி வருகிறார். கடந்த 9-ந்தேதி திடீரென அவரது வங்கிக் கணக்கில் 9 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் ஆனதான செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் இருந்து ரூ. 9000 கோடி டெபாசிட் ஆகியுள்ளதாக குறுஞ்செய்தியை தகவல் வந்துள்ளது. அதில் பல ஜீரோக்கள் இருந்ததால், ராஜ்குமார் எத்தனை ஜீரோக்கள் உள்ளது என்பதை எண்ண முடியாமல் குழம்பி இருந்தார்.அவரது வங்கி கணக்கில் வெறும் ரூ.15 மட்டுமே இருந்த நிலையில், யாரோ ஏமற்றவதாக நினைத்துள்ளார்.
இது மோசடி வேலையாக இருக்குமோ? என்ற சந்தேகத்தில் தனது நண்பருக்கு 21 ஆயிரம் ரூபாய் அனுப்பியுள்ளார். அது அவரது வங்கி கணக்கில் இருந்து டெபிட் ஆகியுள்ளது. இதனால் வங்கிக் கணக்கில் பணம் உள்ளது உண்மைதான் என உறுதி செய்து கொண்ட ராஜ்குமார், மேலும் பணத்தை நண்பருக்கு அனுப்ப முயன்றுள்ளார். அதற்குள் பணம் தவறான நபருக்கு அனுப்பப்பட்டதை சுதாரித்துக்கொண்ட தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி நிர்வாகம், மீதமுள்ள தொகையை உடனடியாக திரும்பப் பெறுவதற்கான முயற்சியை மேற்கொண்டது.
மேலும் தூத்துக்குடியில் இருந்து ராஜ்குமாரை தொடர்புக் கொண்டு ரூ.9000 கோடி தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்டதாக மன்னிப்பு கோரிய வங்கி அதிகாரிகள், பணத்தை செலவிட வேண்டாம் என்றும் தெரிவித்தனர். இதில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் வங்கி தரப்பினர் ராஜ்குமாரை மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது. இதையடுத்து திநகரில் உள்ள வங்கி கிளைக்கு ராஜ்குமார் வழக்கறிஞருடன் சென்றுள்ளார். பின்னர் வங்கி உயர் அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில், ராஜ்குமார் பரிமாற்றம் செய்த ரூ.21,000ஐ திருப்பி கொடுக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டது. அத்துடன் அவருக்கு வாகன கடன் வழங்குவதாக வங்கி உறுதி அளித்து பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்து, நண்பருக்கு அனுப்பிய ரூ.21,000 போக எஞ்சிய பணத்தை வங்கி திருப்பி எடுத்துக் கொண்டது.