* ரூ.2854.74 கோடியில் தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டம், ரூ.1046 கோடியில் 5 புதிய மருத்துவ மனைகளுக்கு கட்டடங்கள்
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற நான்காண்டுகளில் திராவிட மாடல் அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவ துறை மாபெரும் சாதனைகளை தொடர்ந்து நிகழ்த்தி வெற்றிகளையும், விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்று இந்திய மாநிலங்களுக்கெல்லாம் முன்மாதிரியாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
முதல்வர் மு.க.ஸ்டாலின் கொளத்தூரில் 560 படுக்கைகளுடன் உருவாக்கப்பட்ட அரசு பெரியார் மருத்துவமனை, ரூ.240 கோடி மதிப்பீட்டில் அதிநவீன வசதிகளுடன் கூடிய 1,000 படுக்கைகள் மற்றும் 15 அறுவை சிகிச்சை அரங்குகளுடன் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளை தொடங்கி வைத்தார். இதற்கு ரூ.206.08 கோடி மதிப்பீட்டில் உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
இதுவரை 6,23,765 புறநோயாளிகள் மற்றும் 2,14,591 உள்நோயாளிகள் பயனடைந்துள்ளனர். அதேபோல சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை ரோபோடி அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டு சிறுநீரகவியல், புற்றுநோய் அறுவை சிகிச்சை, நாளமில்லா சுரப்பி அறுவை சிகிச்சை, இருதயம் மற்றும் நெஞ்சக அறுவை சிகிச்சை, குடல் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு 336 நோயாளிகள் பயனடைந்துள்ளனர்.
காஞ்சிபுரம் அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை ரூ.120 கோடி மதிப்பீட்டில் 750 படுக்கை வசதிகளுடன் தரை மற்றும் 2 தளங்கள் கொண்டதாக கட்டப்பட்டுள்ளது. கூடுதலாக 3 தளங்கள் கட்ட ரூ.120 கோடி மதிப்பீட்டில் கட்டட பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூ.32 கோடியில் சிறப்பு உபகரணங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. கிண்டியில் ஒன்றிய அரசின் மானியத்துடன் ரூ.151.17 கோடி முதலீட்டில், 200 படுக்கைகளுடன் முதியோர்களின் மருத்துவ பராமரிப்பிற்காக தனித்தன்மையுடன் தேசிய முதியோர் நல மையம் அமைக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்ற 2382 மாணவ மாணவியர் 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீட்டில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படித்திட ரூ.264.72 கோடி சுழல் நிதி உருவாக்கப்பட்டு அம்மாணவர்களின் கல்வி கட்டணம், உணவு கட்டணம், விடுதி கட்டணம் போன்ற செலவினத்தை அரசே ஏற்றுள்ளது. ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவன திட்டத்தின் கீழ் மதுரை, கோவை, சேலம், திருநெல்வேலி, சென்னை கீழ்ப்பாக்கம் மற்றும் ஆவடி ஆகிய இடங்களின் 6 புதிய மருத்துவமனைகளுக்கு ரூ.1115.24 கோடியில் கட்டடங்கள் மற்றும் மருத்தவ உபகரணங்களுடன் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
ரூ.681.64 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீட்டில், மக்களை தேடி மருத்துவம் திட்டம் 200 லட்சம் பயனாளிகளை கடந்து, பொது சுகாதார சேவையில் மற்றொரு முக்கிய மைல்கல்லை அடைந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 2,34,88,431 பயனாளிகள் முதன்முறை சேவைகளையும் 4,52,62,337 பயனாளிகள் தொடர் சேவைகளையும் பெற்று பயன் அடைந்துள்ளனர். ஊட்டச்சத்து நல பெட்டகங்கள் வழங்கும் திட்டத்தின்கீழ், ரூ.1,149.24 கோடியில் 54,45,254 கர்ப்பிணிகளுக்கு ரூ.2000 மதிப்பிலான ஒரு கர்ப்பிணிக்கு 2 ஊட்டச்சத்து பெட்டகங்கள் வீதம் 31,75,595 மகப்பேறு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையில் ரூ.32 கோடி செலவில், 110 இந்திய மருத்துவ முறை பிரிவுகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் ரூ.2 கோடி செலவில் 60 படுக்கைகள் கொண்ட சித்த மருத்துவமனை நிறுவப்பட்டுள்ளது. ஓமியோபதி துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 59 சிகிச்சை உதவியாளர்கள் யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவுகளில் சிகிச்சை உதவியாளர்களாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 100 இந்தியமுறை மருத்துவமனைகள் ரூ.12.98 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
ரூ.6 கோடி செலவில், 30 இந்திய மருத்துவ நிலையங்களில் வெளி நோயாளர்கள் பிரிவுகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. பழங்குடியினர் வாழும் 10 இடங்களில் நடமாடும் சித்த மருத்துவமனைகள் ரூ.94.25 லட்சம் செலவில் திறக்கப்பட்டுள்ளன. ரூ.35.63 கோடி செலவில் பாளையங்கோட்டை, அரசினர் சித்த மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெறுகின்றன. ரூ.1.60 கோடி செலவில் சித்த மருந்துகள் உற்பத்தி செய்யும் நிலையம் சீரமைக்கப்பட்டுள்ளது.
ரூ.5.09 கோடி மதிப்பீட்டில் சென்னை அரசினர் சித்த மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கூடுதல் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள 300 இந்திய மருத்துவ முறை மருத்துவ பிரிவுகள் ரூ.36.06 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டம் உலக வங்கி நிதி ரூ.2,274.07 கோடி (70%), தமிழ்நாடு அரசு நிதி ரூ.974.60 கோடி (30%) ஆக மொத்தம் ரூ.3,248.67 கோடியில் செயல்படுத்தப்படுகிறது.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் 81,33,806 பயனாளிகள் ரூ.5,878.85 கோடி காப்பீட்டு தொகையில் பயனடைந்துள்ளனர். இதில் அரசு மருத்துவமனைகளில் 25,80,867 பயனாளிகளுக்கு ரூ.2,750.28 கோடி காப்பீட்டு செலவில் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் எல்லைக்குள் விபத்தில் முதல் 48 மணி நேரத்திற்குள் காயமடைவோர் அனைவருக்கும் இலவச சிகிச்சை வழங்கும் நம்மை காக்கும் – 48 திட்டத்தில் வெளிநாட்டவர், வெளி மாநிலத்தார் உட்பட அனைவருக்கும் சிகிச்சை வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் மூலம் 7,40,548 பயனாளிகளுக்கு 348.84 கோடி ரூபாய் செலவில் சிகிச்சை அளிக்கப்பட்டும்; அரசு மருத்துவமனைகளில் 3,55,741 பயனாளிகளுக்கு 299.28 கோடி ரூபாய் செலவில் சிகிச்சை வழங்கப்பட்டும் .அவர்களின் இன்னுயிர்கள் காக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழ்நாட்டில் கலைஞர் தொடங்கிய உடல் உறுப்பு தானப் பிரிவில் 749 நன்கொடையாளர்களிடமிருந்து 310 இதயம், 369 நுரையீரல், 632 கல்லீரல், 1,292 சிறுநீரகம் என மொத்தம் 4,300 உறுப்புகள் மற்றும் திசுக்கள் பெற்று பலருக்கும் பயன்படுத்தப்பட்டன.
மூளைச்சாவு அடைந்த உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் இறுதிச் சடங்குகளில் அரசு மரியாதை செலுத்தப்படுகிறது. தேசிய அளவில், தொடர்ந்து 6 ஆண்டுகளாக உறுப்பு தானம் மற்றும் மாற்று அறுவை சிகிச்சையில் சிறப்பாக செயல்பட்டதற்காகவும் மற்றும் 2023ல் 8வது முறையாகவும், ஒன்றிய அரசின் தேசிய விருதை தமிழ்நாடு பெற்றுள்ளது. 10,40,929 நோயாளிகளுக்கு அவசரகால முற்றிய கண் புரை அறுவை சிகிச்சைகள் 93 அரசு மருத்துவமனைகள், 91 தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு செயற்கை மிளிலி சென்ஸ் இத்திட்டத்தின் கீழ் பொருத்தப்பட்டுள்ளது.
36 கண் வங்கிகள் மூலம் 34,330 கண்கள் தானமாக பெறப்பட்டு கண் கருவிழி மாற்று அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு இணைய செயலி உருவாக்கியதின் மூலம் சென்ற ஆண்டு சுமார் 10,000 கண் கொடையாளர்கள் தங்கள் கண்களை தானம் செய்வதற்கு பதிவு செய்துள்ளனர். பள்ளி சிறார்களுக்கு கண் பரிசோதனை செய்து சுமார் 8,22,232 மாணவர்களுக்கு இலவசமாக கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் குழந்தை இறப்பு விகிதத்தை 1,000 பிறப்புகளுக்கு 28ஆக இருந்த தேசிய சராசரியிலிருந்து தமிழ்நாடு 2024 மாநில அறிக்கையின் படி 8 ஆக குறைக்கப்பட்டு சாதனை நிகழ்த்தியுள்ளது.
கிராம புறங்களில் பொது மருத்துவம் சிறப்பு சேவைக்கான விருது, காசநோய் இல்லாத நிலையை தமிழ்நாட்டில் உருவாக்கி கண்டுள்ள முன்னேற்றம் என்பதற்கான விருது, கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை வழங்குவதில் சிறப்பு விருது, மலேரியா தடுப்பு சிறந்த நடவடிக்கைக்கான தேசிய விருது, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சிறந்த செயல்பாடுகளுக்கான விருது என கடந்த 4 ஆண்டுகளில் மக்கள் நல்வாழ்வு துறையில் தமிழ்நாடு நிறைவேற்றி வரும் புதிய புதிய திட்டங்களால் தொடர்ந்து தேசிய அளவில் பாராட்டுகளை பெற்று விருதுகளை குவித்து வருகிறது.
அந்த வகையில் திராவிட மாடல் அரசு மொத்தம் 525 விருதுகளை பெற்றுள்ளதன் மூலம் இந்தியாவின் மிக சிறந்த மாநிலம் தமிழ்நாடு பாராட்டப்படுகிறது. மருத்துவ உதவிகளை நாடி அயல் நாடுகளுக்கு சென்ற நிலை மாறி இன்று அயல் நாட்டினர் மருத்துவ தேவைகளுக்காக தமிழ்நாட்டை தேடி வருவது தமிழ்நாடு பெற்றுள்ள தனிப் பெருமை ஆகும். இது திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளில் தலை சிறந்த சாதனை ஆகும்.