* கடந்தாண்டை காட்டிலும் இந்தாண்டு 46 சதவீதம் உயர்வு
* சென்னையில் ஒரே ஆண்டில் 1,668 கார்கள் விற்பனை, போக்குவரத்து ஆணையரகம் தகவல்
சென்னை:இந்தியாவில் மக்களிடையே வாகனங்கள் மீதான மோகம் என்பது தொடர்ந்து அதிகரிக்கக்கூடிய ஒன்றாக இருக்கும். அதன்படி, தற்போதைய காலக்கட்டங்களில் நகர்ப்புறங்களில் ஒரு வீட்டில் ஒரு இருசக்கர வாகனம் மற்றும் ஒரு கார் கட்டாயம் இருக்கின்றன. அதற்கேற்ப, மோட்டார் நிறுவனங்கள் புதிய புதிய மாடல்களை வணிக சந்தைக்கு கொண்டு வந்து தங்களின் வர்த்தக்கத்தை பெருக்கிக்கொள்கின்றன. மேலும் ஒவ்வொரு ஆண்டும் கார்களின் விற்பனை என்பது அதிகரித்து வருகிறது.
அந்தவகையில், 2023-24ம் நிதியாண்டில் தமிழ்நாட்டில் சொகுசு கார்களின் விற்பனை குறித்து போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஆணையரகத்தின் சார்பில் தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், தமிழ்நாட்டில் ஆடி, லம்போர்கினி, பி.எம்.டபுள்யூ, ஃபெராரி, மெர்சிடிஸ் பென்ஸ் போன்ற சொகுசு கார்களை முன்பதிவு செய்யும் செல்வந்தர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதுதவிர, கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தாண்டு தமிழ்நாட்டில் அதிகளவிலான சொகுசு கார்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, 2019-20ம் ஆண்டில் 4,187 சொகுசு கார்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், 2020-21ம் ஆண்டு 2,816 சொகுசு கார்கள் வாங்கப்பட்டுள்ளன. இதில் கொரோனா நோய்த்தொற்றால் இந்த எண்ணிக்கையில் சற்று சறுக்கல் ஏற்பட்டது. இதையடுத்து பெருந்தொற்றின் காலம் முடிந்து கடந்த 2021-22ம் ஆண்டில் 3,954 சொகுசு கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதேபோல், 2022-23ம் ஆண்டு 5797 சொகுசு கார்கள் வாங்கப்பட்ட நிலையில், அந்த எண்ணிக்கை 2023-24ம் ஆண்டு 8,475 ஆக அதிகரித்துள்ளதாக போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஆணையரகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது கடந்தாண்டு விற்பனை செய்யப்பட்ட சொகுசு கார்களின் எண்ணிக்கையை விட 46.2 சதவீதம் அதிகம். அதேபோல், 2023-24ம் ஆண்டில் அதிகபட்சமாக 1,192 பி.எம்.டபுள்யூ கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து 1,122 மெர்சிடிஸ் பென்ஸ் கார்களும் 217 ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களும் 84 போர்ஷே கார்களும் 77 ஆடி கார்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. நடப்பாண்டில் அதிகபட்சமாக சென்னையில் 1668 சொகுசு கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 4 ரோல்ஸ் ராய்ஸ் கார்களும் அடங்கும்.
இதற்கு அடுத்ததாக கோவையில் 510 சொகுசு கார்களும், மதுரையில் 110 கார்களும், திருநெல்வேலியில் 95 கார்களும் திருச்சியில் 65 கார்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக சொகுசு கார் விற்பனையாளர்கள் கூறியதாவது: தமிழ்நாட்டில் இளம் தொழிலதிபர்கள், மருத்துவர்கள், வக்கீல்கள் சொகுசு கார்வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
சென்னையை தவிர்த்து கோவை, மதுரை, திருச்சி, சேலம், ஈரோடு, திருப்பூர், திருவள்ளூர் உள்ளிட்ட நகர்ப்புறங்களிலும் சொகுசு கார் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். கொரோனாவிற்கு பிறகு இளம் தொழிலதிபர்கள் சொகுசு கார் வாங்க ஆர்வம் காட்டுவதாகவும், இதில் 70% பேர் 50 வயதுக்கு குறைவானவர்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. பாரம்பரியமாக இருக்கக்கூடிய மாருதி, டாடா போன்ற கார்களை வாங்குவதை காட்டிலும் சொகுசு கார்களை வாங்குவது டிரண்டிங் ஆகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.