சென்னை: மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய லோக் அதாலத் தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியுமான கே.ஆர்.ஸ்ரீராம் அறிவுறுத்தலின்படி, மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல் தலைவர் நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் மேற்பார்வையில் நடந்தது.
இதில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 6 அமர்வுகளும், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 3 அமர்வுகளும் ஏற்படுத்தப்பட்டு நிலுவை வழக்குகள் விசாரிக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் 496 அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட நிலுவையில் உள்ள வழக்குகள் விசாரிக்கப்பட்டன. இதில் மொத்தம் 1 லட்சத்து 12 ஆயிரத்து 561 நிலுவை வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு மொத்தம் ரூ.631 கோடியே 80 லட்சத்து 27 ஆயிரத்து 703 பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்டது.