சென்னை: தமிழ்நாடு மின்கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் தஞ்சாவூர் சரக செயலாளராக இருந்த பால வெங்கடேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், சங்கத்திற்கு கடந்த 2019ம் ஆண்டு தேர்தல் நடந்தது. அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் 2022ம் ஆண்டு நிறைவடைந்து விட்டது. இருப்பினும், முறைப்படி தேர்தல் நடத்தாமல் ஏற்கனவே இருக்கக்கூடிய தலைவர், பொதுச்செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் தங்களது பதவியை தவறாக பயன்படுத்தி வருகிறார்கள்.
எனவே, தேர்தலை நடத்துமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி கே.குமரேஷ்பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு மின்கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கம் உள்ளிட்டோர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 2021ம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டதாகவும், அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இதனையடுத்து இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி, 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் தேர்தல் நடத்தப்பட்டதாக கூறினாலும் கூட அவர்களின் பதவிக்காலம் 2024ம் ஆண்டு நிறைவடைந்து விட்டது. எனவே, தமிழ்நாடு மின்கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் தேர்தலை நடத்த நிர்வாகியாக சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி என்.கிருபாகரன் நியமிக்கப்படுகிறார். அவர் தலைமையில் சங்க தேர்தலை 6 மாதத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தார்.