சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் தமிழ்நாட்டின் புத்தொழில் சூழமைவை மேம்படுத்தும் வகையில் 50-க்கும் மேற்பட்ட செயல் திட்டங்களை உள்ளடக்கிய ‘தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க கொள்கை – 2023’னை வெளியிட்டார். மேலும், தமிழ்நாடு பட்டியலினத்தவர், பழங்குடியினர் புத்தொழில் நிதித்திட்டத்தின் கீழ் 8 நிறுவனங்களுக்கு 10 கோடியே 85 லட்சம் ரூபாய் பங்கு நிதி வழங்குவதற்கான ஒப்புதல் ஆணைகளையும் வழங்கினார்.
தமிழ்நாட்டின் புத்தொழில் சூழமைவை மேம்படுத்தும் வகையிலும், தமிழ்நாட்டினை மிகச் சிறந்த புத்தொழில் சூழமைவு கொண்ட இடங்களில் ஒன்றாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும் ‘தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க கொள்கை – 2023’ உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கொள்கையானது 2030-க்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக தமிழ்நாட்டினை உருவாக்க வேண்டும் என்ற இலக்கினை அடைவதில் புத்தொழில் நிறுவனங்களின் பங்களிப்பினை ஊக்குவிப்பதற்கும் அடிப்படையாக இருக்கும்.
தமிழ்நாடு பட்டியலினத்தவர், பழங்குடியினர் புத்தொழில் நிதி திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 8 புத்தொழில் நிறுவனங்களில் 10 கோடியே 85 இலட்சம் ரூபாய் பங்கு முதலீடு செய்வதற்கான ஒப்புதல் ஆணைகளை பயனாளிகளிடம் முதல்வர் மு.க ஸ்டாலின் வழங்கினார். அரசு முதலீடு செய்வதால் அந்த நிறுவனங்களின் மீதான நம்பகத்தன்மை அதிகரிப்பதோடு அவர்களின் சந்தை விரிவாக்கத்திற்கும் உறுதுணையாக இருக்கும். சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர், ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த இந்த நிறுவனங்களில் 2 புத்தொழில் நிறுவனங்கள் பெண் தொழில்முனைவோர்களால் நடத்தப்படுகிறது. பழங்குடியினரால் நடத்தப்படும் ஒரு புத்தொழில் நிறுவனமும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பதப்படுத்தப்பட்ட கருவாடு வகைகளை, அதன் மணம் வெளியில் வராத வண்ணம் தனித்துவமான பேக்கிங் செய்து சந்தைப்படுத்தும் லெமூரியன் நிறுவனம் , வேளாண் நிலங்களில் பயன்படுத்துவதற்கேற்ற டிரோன் கருவிகளை தயாரிக்கும் வாயுரதா நிறுவனம், சினிமா தயாரிப்பு துறையில் நவீன தொழில்நுட்பத்தினை கொண்டியங்கும் 70 எம்.எம் டிஜிவெர்ஸ் நிறுவனம், காய்கறிகளை கொண்டு மால்ட் உணவு வகைகளை தயாரிக்கும் வேர்வை புட்ஸ் நிறுவனம், தோடா பழங்குடியினரின் கைவேலைப்பாடு செய்த துணிகளை இணைய வழியில் சந்தைப்படுத்தும் ஐ கேம் டெக்னாசிஸ் நிறுவனம், உற்பத்தி துறையில் இயங்கும் கேஎஸ்யு ஹார் நெக்ஸன் நிறுவனம், ஐஓடி தொழில்நுட்ப துறையில் இயங்கும் என்ந்து டெக்னாலஜிஸ் மற்றும் ஆக்கம் டெக்னாலஜிஸ் ஆகிய எட்டு நிறுவனங்களுக்கு பங்கு முதலீட்டு ஒப்புதல் ஆணைகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில், குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் (பொறுப்பு) அருண் ராய், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் சிவராஜா இராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். அரசு முதலீடு செய்வதால் அந்த நிறுவனங்களின் மீதான நம்பகத்தன்மை அதிகரிப்பதோடு அவர்களின் சந்தை விரிவாக்கத்திற்கும் உறுதுணையாக இருக்கும்.