சென்னை: தமிழ்நாடு தகவல் ஆணையம் சார்பில் அரசின் அனைத்து நிர்வாக துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. மாநில தலைமை தகவல் ஆணையர் முகமது ஷகீல் அக்தர் தலைமையில், அனைத்து மாநில தகவல் ஆணையர்கள் மற்றும் தமிழ்நாடு அரசின் அனைத்து நிர்வாக துறையினருடன் இணைந்த ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. சென்னையில் நடந்த கூட்டத்தில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களின் நேர்முக உதவியாளர்கள் (பொது) பங்கேற்றனர். பிற்பகலில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், தமிழ்நாடு அரசின் அனைத்து நிர்வாக துறைகளை சார்ந்த உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005-ஐ முறையாக பின்பற்றுவது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றமும் இச்சட்டத்தை பின்பற்றுதல் குறித்து வழங்கியுள்ள தீர்ப்புகளின் மீது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மனுதாரர்களின் மனுக்களின் மீது துரித நடவடிக்கைகள் மேற்கொள்வது, முறையான தகவல் வழங்குவது, குறித்த காலத்திற்குள் தகவல் வழங்குவது குறித்து விளக்கப்பட்டது. மேலும், காலாண்டுக்கு ஒரு முறை இது போன்ற ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு, மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்து துறைகளின் தகவல் பெறும் உரிமைச் சட்டம் சம்பந்தப்பட்ட செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் எடுத்துரைக்கப்பட்டது.