சென்னை: தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சி நடைபெறுவதால் தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்கின்றன என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் நாட்டில் உள்ள செயின்ட் கோபைன் நிறுவன அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், ஸ்ரீபெரும்புதூர் நிறுவனத்தில் புதிய பிரிவுகளை கடந்த 9-ம் தேதி தொடங்கி வைத்தேன். செயின்ட் கோபைன் நிறுவனம் ஓரகடத்தில் புதிய உற்பத்தி திட்டத்தை தொடங்குகிறது. 1998-ம் ஆண்டு செயின்ட் கோபைன் நிறுவனத்துக்கு அடிக்கல் நாட்டியவர் கலைஞர்.
தமிழ்நாட்டில் சிறப்பான முதலீட்டு சூழல் உள்ளதால் செயின்ட் கோபைன் நிறுவனம் தொடர்ந்து முதலீடு செய்கிறது. சுமார் 3,400 கோடி ரூபாய் முதலீட்டில், 1150 பேருக்கு வேலைவாய்ப்பு தரும் வகையில் புதிய உற்பத்தி ஆலை அமைகிறது என்று கூறினார். செயின்ட் கோபைன் நிறுவன தொழில் முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துக்கள். உங்கள் அனைவரையும் சென்னையில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.