தஞ்சாவூர்: தமிழ்நாடு விவசாயிகள் சங்க 27வது மாநில மாநாடு தஞ்சாவூரில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது: தற்போது 3ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றால் தான் 4ம் வகுப்பு செல்ல முடியும். அதேபோல், 5ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றால் தான் 6ம் வகுப்பில் செல்ல முடியும் என உள்ளது. இந்த நிலையை அமல்படுத்தினால் 75 சதவீத மாணவர்கள் கல்வியை விட்டு சென்று விடுவார்கள். ஏழை மாணவர்களுக்கு கல்வி இல்லாமல் போய்விடும். இதற்கு தான் மும்மொழி கொள்கையை ஏற்காமல் நாங்கள் எதிர்க்கிறோம்.
ஒன்றிய அரசு நடத்தும் நவோதயா பள்ளியில் ஒன்றில் கூட தமிழ் ஆசிரியர்கள் இல்லை. மூன்றாவது மொழியாக எதை வேண்டுமானாலும் படிக்கலாம் என்றால் அவர்கள் கேட்கும் மொழிக்கு எல்லாம் ஆசிரியர் நியமித்து சொல்லிக் கொடுப்பது சாத்தியமில்லை. எனவே, அவர்கள் இந்தியை திணிக்கதான் பார்க்கிறார்கள். எனவே தான் இந்தி திணிப்பை கண்டித்து போராட்டம் நடத்துகிறோம். இந்த போராட்டம் கண்டிப்பாக வெற்றி பெறும். ஒன்றிய அரசு இதனை அரசியல் ரீதியாக எதிர்க்க முடியாமல், மாநில அரசுக்கு கொடுக்க வேண்டிய நிதியை குறைத்தால் மாநில அரசுக்கு நெருக்கடி ஏற்படும் என்ற எண்ணத்தில் நிதியை குறைக்கிறார்கள். இதனை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.