சென்னை: தமிழ்நாட்டில் பசுமைப் பள்ளிகள் திட்டத்தை விரிவுபடுத்துவதற்காக 26 பள்ளிகளுக்கு ரூ.5 கோடியே 20 லட்சம் நிதியை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை ஒதுக்கீடு செய்துள்ளது. இதுகுறித்து அரசு முதன்மைச் செயலாளர் செந்தில்குமார் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் பசுமைப் பள்ளிகள் திட்டத்தை விரிவுபடுத்தும் நோக்கில், 2024ம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு பள்ளிக்கு ரூ. 20 லட்சம் வீதம் ரூ.9 கோடியே 20 லட்சம் தொகையை பள்ளிக்கல்வித் துறைக்கு பரிவர்த்தனை செய்ய அரசு அனுமதி அளித்தது. இந்த தொகை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து பெறப்பட்டது.
அதன் தெடர்ச்சியாக 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி சுற்றுச்சூழல் துறையின் இயக்குநர் வெளியிட்ட கடிதத்தின்படி, அந்த துறையின் மூலம் 26 பள்ளிகள் பட்டியல்கள் அனுப்பி வைக்கப்பட்டு அவற்றில் 2ம் கட்டமாக பசுமைப் பள்ளிகள் திட்டத்தை செயல்படுத்த அரசிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. இயக்குநரின் இந்த கடிதத்தை கவனமுடன் பரிசீலித்த அரசு, ஒரு பள்ளிக்கு ரூ.20 லட்சம் வீதம் செலவிட மொத்தம் ரூ.5 கோடியே 20 லட்சம் நிதியை பள்ளிக்கல்வித் துறைக்கு பரிமாற்றம் செய்ய இயக்குநருக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, ஒரு பள்ளிக்கு ரூ.20 லட்சம் வீதம், திருவாரூர் 2, தென்காசி1, சிவகங்கை 1, புதுக்கோட்டை 6, தேனி 3, வேலூர் 1, விருதுநகர் 2, ராமநாதபுரம் 2, கன்னியாகுமரி 1, கோவை 2, மதுரை 1, திருநெல்வேலி 1, காஞ்சிபுரம் 1, அரியலூர் 1, மயிலாடுதுறை 1 என மொத்தம் 26 பள்ளிகளுக்கு பசுமைப் பள்ளிகள் திட்டத்தை விரிவுபடுத்த நிதி ஒதுக்கப்படுகிறது.