சென்னை: இரண்டு நாட்களுக்கு முன்னர் தனியார் பள்ளி ஆண்டுவிழாவில் பங்கேற்று பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக பாடத்திட்டம் குறித்து விமர்சனம் செய்தார். அவரின் இந்த பேச்சு ஆசிரியர்கள், கல்வியாளர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக அதற்கு கண்டனமும் தெரிவித்து வருகின்றனர்.தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் இரா.தாஸ் வெளியிட்ட அறிக்கை:
தமிழக ஆளுநர் பேச்சில், தேசிய பாடத்திட்டத்துடன் ஒப்பிடும் போது மாநில பாடத்திட்டம் மோசமாக உள்ளது என்று காட்டமாக விமர்சித்துள்ளார். கல்லூரி மாணவர்களிடம் செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் குறித்த அறிவுத் திறன் குறைவாக உள்ளது என்றும் அவர்களுக்கு நவீன கல்வி முறையை அறிமுகம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். ஆளுநரின் இந்த விமர்சனத்தை தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வன்மையாக கண்டிக்கிறது.
தமிழ்நாடு பாடத்திட்டத் திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் அறிவியல் அறிஞர்களாகவும், மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும் சட்ட வல்லுநர்களாகவும் பல்வேறு துறைகளில் முன்னிலை பெற்று இந்திய நாட்டுக்கு முன்னுதாரணமாக இருந்து வருகின்றனர். நீட் போன்ற போட்டித் தேர்விலும் அதிக அளவில் தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். எனவே ஆளுநர் தனது கீழ்த்தரமான வார்த்தைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் தமிழ்நாடு முழுக்க ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.