சென்னை : 40 மாத திராவிட மாடல் ஆட்சியில் கிராமப்புற முன்னேற்றத்தில் இந்தியாவிற்கே வழிகாட்டும் மகத்தான திட்டங்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை :
இந்தியாவின் உயிர் அதன் கிராமப்புறங்களில்தான் உள்ளது என்றார் அண்ணல் காந்தியடிகள். கிராமப்புற மக்களில் பெரும்பாலோர் விவசாயிகள், நெசவாளர்கள், உடல் உழைப்பையே மூலதனமாகக் கொண்டு உழைக்கும் தொழிலாளர்கள் இந்த மக்களின் உழைப்பால்தான் ஏனையோர் வாழ முடிகிறது. இந்தக் கிராமப்புற மக்களின் மேம்பாட்டிற்காகக் கிராமப்புற வளர்ச்சிக்குத் தனி முன்னுரிமை அளிக்கப்படல் வேண்டும். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமையும் காலங்களில் எல்லாம் கிராமப்புறங்களின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடும் அரிய பல திட்டங்கள் சிறப்பாகச் செயல்படுத்தப்படுகின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் 40 மாதகால திராவிட மாடல் ஆட்சியில் கிராமப் புறங்களில் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்துவதில் தனிக்கவனம் செலுத்திப் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
கிராம ஊராட்சிகளில் தகவல் தொழில் நுட்பச் சாதனங்கள்
கிராம ஊராட்சிகளில் போதுமான தகவல் தொழில்நுட்பக் கட்டுமானத்தை உறுதி செய்திடும் விதமாக தமிழ்நாட்டிலுள்ள அனைத்து 12,525 கிராம ஊராட்சிகளிலும் கணினிகள், பிரிண்டர்கள் மற்றும் தடையில்லா மின்கலன்கள் (UPS) சாதனம் ஆகியவை நிறுவப்பட்டு ஊராட்சி அலுவலகங்களில் பயன்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன.
இணையதளம் வாயிலாக அரசுச் சேவைகள்
சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, திட்ட அனுமதி, மனைப்பிரிவு அனுமதி மற்றும் கட்டட அனுமதி போன்ற குடிமக்கள் நலன் சார்ந்த அரசு சேவைகளை மக்கள் இணையதளம் வாயிலாக எளிதில் பெற உதவும் வகையில் ஊராட்சிகளில் மின் ஆளுமைக்கான Vptax Portal நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
கூடுதலாக இரண்டு கிராமசபைக் கூட்டங்கள்
2022-23 ஆம் ஆண்டிலிருந்து கிராம சபைக் கூட்டங்கள் தண்ணீர் தினம் (மார்ச் 22) மற்றும் உள்ளாட்சிகள் தினம் (நவம்பர் 1) ஆகிய இரண்டு நாள்களையும் சேர்த்து ஆண்டிற்கு மொத்தம் 6 முறை நடத்தப்படுகிறது.
ஊராட்சிகளுக்கு நிதிவரம்பு அதிகரிப்பு
கிராம ஊராட்சிகளுக்கு நிர்வாக அனுமதி அளிக்கும் நிதிவரம்பு ரூ.2 இலட்சம் என்பது ரூ.5 இலட்சமாகவும், வட்டார ஊராட்சிகளுக்கு ரூ.10 இலட்சம் என்பது ரூ.25 இலட்சமாகவும், மாவட்ட ஊராட்சிகளுக்கு ரூ.20 இலட்சம் என்பது ரூ.50 இலட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
மீண்டும் உத்தமர் காந்தி விருது
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உள்ளாட்சித் துறை அமைச்சராகத் திகழ்ந்தபோது 2006ஆம் ஆண்டில் மாநிலத்தில் சிறப்பாகச் செயல்புரியும் கிராம ஊராட்சிகளுக்கு உரிய அங்கீகாரத்தினை வழங்கும் பொருட்டு உத்தமர் காந்தி விருது அளிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அத்திட்டம் 2021 முதல் மீண்டும் நிறுவப்பட்டுச் சிறப்பாகச் செயல்படும் கிராம ஊராட்சிகளுக்கு ரூ.10 இலட்சத்திற்கான ஊக்கத் தொகையுடன், மாவட்டத்திற்கு ஒரு கிராம ஊராட்சி வீதம் 37 கிராம ஊராட்சிகளுக்கு இவ்விருது வழங்கப்படும்.
சமூக நிறுவனங்களுக்கு விருதுத் திட்டம்
சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்படும் தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக, சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்படும் நிறுவனங்களுக்காக (CSR) விருதினைத் திராவிட மாடல் அரசு ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் தனியார் நிறுவனங்கள் தங்களுடைய நிதியினையும் தொழில்நுட்பங்களையும் ஊராட்சிகளுக்கு அளித்து ஊரக வளர்ச்சிக்கு உறுதுணை புரிய ஊக்கமளிக்கப்பட்டுள்ளது.
ஊராட்சிகளின் சிறந்த நிதி நிர்வாகத்திற்கான தமிழ்நாடு எளிமைப்படுத்தப்பட்ட ஊராட்சி கணக்குகள் திட்டம்
ஊராட்சிகளுக்கான மாநில நிதிக் குழு மானியம் மற்றும் சொந்த வருவாய் இனங்களைப் பராமரிக்க ஒற்றை மையக் கணக்கு (SNA) மூலம் சிறந்த நிதி நிர்வாகத்தினைக் கிராம ஊராட்சிகளில் ஏற்படுத்தி வேலைப் பளுவினைக் குறைத்துக் கணக்குகளை எளிதாகப் பராமரித்திடும் பொருட்டு தற்போது நடைமுறைபடுத்தப்பட்டுச் செயல்பாட்டில் உள்ளது.
ஊரகப் பகுதி சுகாதாரப் பணியாளர்கள் நலன்
2022-23 ஆம் ஆண்டிற்கென ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஊரகப் பகுதிகளில் பணியமர்த்தப்பட்டுள்ள சுகாதாரப் பணியாளர்களின் நலனுக்கான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தெருவிளக்குகள், பராமரிப்பில் தானியங்கி முறை
தெருவிளக்குகள் பராமரித்தலில் தானியங்கி முறையினைப் புகுத்திடும் வகையில் இண்டர்நெட் ஆப் திங்ஸ் (IOT) முறையில் சோதனை முயற்சியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாம்பாக்கம், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கருங்காடு ஆகிய இரண்டு ஊராட்சிகளிலும் மேற்கொள்ளப்படுகின்றன.
ஊராட்சி பிரிதிநிதிகள் – பொதுமக்களுக்கு உதவிட – உதவி மையம்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழிகாட்டும் வழிமுறையாக (155340) என்ற எண்ணுடன் ஓர் உதவி மையம் (Help Desk) இயக்குநரகத்தில் 24X7 என்ற வகையில் முழுநேரம் செயல்படும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.
நம்ம கிராமசபை – புதிய செயலி
கிராமசபை நிகழ்வுகளைக் கண்காணித்திட துறையானது “நம்ம கிராம சபை” என்கிற புதிய கைபேசி செயலியை அறிமுகம் செய்துள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்
2021 முதல் மூன்று ஆண்டுகளிலும் பெண்கள் 86.26 சதவீதத்திற்கும், மாற்றுத் திறனாளிகள் 2,95,664 பேரும் தாழ்த்தப்பட்ட பழங்குடியினரில் 29.59 சதவீதத்தினரும் பயன் பெற்றுள்ளனர்.3 ஆண்டுகளிலும் ரூ.34,609.44 கோடியில் 10 இலட்சத்து 11 ஆயிரத்து 334 குடும்பங்கள் 100 நாள்கள் வேலை செய்து பயன் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பு நான்காவது ஆண்டில் ரூ.6,359.24 கோடி ஒதுக்கீட்டில் 100 நாள் வேலைகள் நடைபெறுகின்றன.இத்திட்டம் சிறப்பான முறையில் செயல்படுத்தப்படுவதன் மூலம் நீடித்த நிலைத்த வளர்ச்சியின் குறிக்கோள்களான பசியின்மை, வறுமையின்மை, பாலின வேறுபாடின்மை, ஆகியவை நம் நாட்டில் எய்தப்படுகிறது.
நபார்டு – RIDF திட்டம் (NABARD- RIDF)
நபார்டு – RIDF திட்டத்தின் கீழ் (2021 முதல் 2024 வரை), 551 கி.மீ நீளமுள்ள 287 சாலைப் பணிகள் மற்றும் 342 பாலங்கள் மேற்கொள்ள ரூ. 1,554 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 472 கி.மீ நீளமுள்ள 275 சாலைப் பணிகள் மற்றும் 185 பாலங்கள் ரூ. 920 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ளன.
ஊரகச் சாலைகள் மேம்பாடு
முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் (MGSMT), பிரதமமந்திரி கிராமச் சாலைத் திட்டம் (PMGSY), தமிழ்நாடு ஊரகச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் (TNRRIS) மற்றும் நகர்ப்புறத்தை ஒட்டியுள்ள ஊராட்சிகளில் சாலை மேம்பாடு (Peri- Urban) ஆகிய திட்டங்களின் கீழ் (2021 முதல் 2024 வரை), 18,899 கி.மீ நீளமுள்ள 14,262 சாலைப் பணிகள் மற்றும் 83 பாலங்கள் மேற்கொள்ள ரூ.9,030 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இதுவரை 13,733 கி.மீ நீளமுள்ள, 11,460 சாலைகள் மற்றும் 22 பாலங்கள் ரூ. 5219 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ளன
ரூ. 594 கோடியில் ஊராட்சிகளில் சிறப்புப் பணிகள்
2021-22 ஆம் ஆண்டிலிருந்து ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலக வளாகங்கள். ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள், மாவட்ட ஊராக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முகாம் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்புக் கட்டடம், எரிவாயு தகன மேடை, சாலைகள், பாலங்கள், சிமெண்ட் மற்றும் பேவர் பிளாக் சாலைகள், பேருந்து நிலையம் மற்றும் நிறுத்தம், சமுதாயக்கூடங்கள், மகாகவி பாரதியார் வாழ்வாதார பூங்கா போன்ற மொத்தம் 154 பணிகளை நிறைவேற்றிட ரூ.594 கோடி மதிப்பீட்டில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
ஊரக வீடு வழங்கும் திட்டங்கள் (Rural Housing)
தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசால் பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டத்தின்கீழ் முந்தைய ஆட்சிக் காலமான 2016-17 முதல் 2019-20 வரையிலும், திராவிட மாடல் ஆட்சிகாலமான 2021-22 ஆம் ஆண்டுகளிலும் மொத்தமாக 7,38, 139 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 2016-17 முதல் 6.5.2021 வரையிலான காலகட்டத்தில் 2,89,730 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும், 3,30,757 வீடுகள் 7.5.2021 முதல் 3.10.2024 வரை கட்டி முடிக்கப்பட்டுள்ளன. நிலுவையில் உள்ள வீடுகளும் முடிவடையும் நிலையில் உள்ளன.
பெரியார் நினைவு சமத்துவபுரம்
தந்தை பெரியாரின் சமூக சமத்துவ கொள்கைக்குப் புத்துயிரூட்டி அனைத்துச் சமூகத்தினரும் ஒற்றுமையாகவும் சகோதரத்துவத்துடனும் வாழவேண்டும் என்ற நோக்கத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டம் சுதந்திர தினப் பொன்விழாவையொட்டி 1997ம் ஆண்டில் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, 1997 முதல் 2001 வரையில் 145 சமத்துவபுரங்கள், 2008-2011 வரையில் 93 சமத்துவபுரங்கள் என மொத்தம் 238 சமத்துவபுரங்களுக்கு ஆணை வழங்கப்பட்டு அதில் 233 சமத்துவபுரங்கள் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டன. மீதமுள்ள 5 சமத்துவபுரங்களில் 4 சமத்துவபுரங்களின் பணிகள் முடிக்கப்பட்ட நிலையிலும், விழுப்புரம் மாவட்டம் கொழுவாரி ஊராட்சியிலுள்ள 1 சமத்துவபுரம் பணிகள் முடிக்கப்படாமலும், கடந்த 10 ஆண்டுகளாக மக்களின் பயன்பாட்டிற்கு ஒதுக்கப்படாத நிலையிலும் இருந்தன.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கடந்த 24.6.2021 அன்று மேதகு ஆளுநர் அவர்களின் உரை மீதான விவாதத்தின்போது தமிழ்நாட்டில் கட்டப்பட்ட 238 சமத்துவ புரங்களும் சீரமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, மக்களின் பயன்பாட்டிற்கு ஒதுக்கப்படாத 4 சமத்துவபுரங்கள் உட்பட 149 சமத்துவபுரங்களை முதற்கட்டமாக 2021-22ம் ஆண்டில் சீரமைப்பதற்காக ரூ.194.44 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முழுவதும் முடிவுற்றது.
மேலும், இரண்டாம் கட்டமாக 2022-2023ம் ஆண்டில் மீதமுள்ள 88 சமத்துவபுரங்களைச் சீரமைக்க ரூ. 67.01 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அப்பணிகளும் முழுவதுமாக முடிவுபெற்றது. விழுப்புரம் மாவட்டம், வானூர் ஊராட்சி ஒன்றியம் கொழுவாரி சமத்துவபுரம் முற்றிலுமாகப் புதுப்பிக்கப்பட்டு 5.4.2022 அன்றும், சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியம், கண்ணமங்கலம் பேட்டை ஊராட்சியில் உள்ள கோட்டைவேங்கன்பட்டி சமத்துவபுரம் ஆகியவை முற்றிலுமாகப் புதுப்பிக்கப்பட்டு 8.6.2022 அன்றும் முதலமைச்சர் அவர்களால் மக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்டன.
கலைஞரின் கனவு இல்லம்
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2024-25 ஆம் ஆண்டில் ஒரு இலட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு ஒரு வீட்டிற்கு ரூ.3,50,000/- வீதம் மொத்தம் ரூ.3500 கோடி நிதி ஒதுக்கீட்டிற்கு அனுமதி ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேற்கூறிய ஒரு இலட்சம் வீடுகளும் தொடங்கப்பட்டு பல்வேறு கட்டுமான நிலைகளில் முன்னேற்றத்தில் உள்ளது.
புதிய சமத்துவபுரங்கள்
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் ஆளுநர் உரையின் மீது 24.06.2021 அன்று நடைபெற்ற விவாதத்தின் போது புதிய சமத்துவபுரங்கள் அமைக்கப்படும் என அறிவித்ததன் அடிப்படையில் சமத்துவபுரம் அமைப்பதற்கு போதுமான நிலம் கண்டறியப்பட்ட எட்டு மாவட்டங்களில், மாவட்டத்திற்கு ஒன்று வீதம் 8 புதிய சமத்துவபுரங்கள் கட்டுவதற்கு ஆணையிடப்பட்டு ரூ,50 கோடி ஒதுக்கீடு செய்து வீடுகள் கட்டும் பணி முழு வீச்சில் நடைபெற்றுவருகிறது.
ஊரகப்பகுதிகளில் அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் கட்டப்பட்ட வீடுகளை பழுது பார்த்தல் 2024-25 (RRH)
பல்வேறு அரசுத் திட்டங்களின் கீழ் 2000-01ஆம் ஆண்டு வரை கட்டப்பட்ட வீடுகளை, ரூ.1954.20 கோடி மதிப்பீட்டில், 2024-25 மற்றும் 2025-26 ஆகிய இரண்டு ஆண்டுகளில் பழுதுபார்க்கும் பொருட்டு ஊரக வீடுகள் பழுதுபார்த்தல் (RRH) திட்டத்திற்கான அரசாணை நிலை எண்:69, ஊ.வ (ம) ஊ.து (மாஅதி-1), நாள்:15.03.2024 வெளியிடப்பட்டுள்ளது. 2024-2025 ஆம் ஆண்டில், 1,00,466 வீடுகள் ரூ.832.54 கோடி மதிப்பீட்டில் ஓட்டு வீடுகள் மற்றும் சாய்தள வீடுகளுக்கு சிறுபழுதுகள் மற்றும் பெரும்பழுதுகள் என 10,226 பழுதுகள் முடிக்கப்பட்டு மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகிறது.
நமக்கு நாமே திட்டம் (ஊரகம்)
ஊரகப் பகுதி மக்களின் சுய உதவி, சுயச்சார்பு எண்ணம் ஆகியவற்றை வலிமைப்படுத்தவும், பரவலாக்கவும் மக்கள் பங்கேற்புடன் கூடிய நமக்கு நாமே திட்டம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 1997-98 ஆண்டு நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.இத்திட்டத்திற்காக 2021-22 ஆம் ஆண்டு முதல் நான்கு ஆண்டிற்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.இத்திட்டத்தின்கீழ் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை பயன்பாட்டிற்காக 728 கட்டடங்களும், 91 கட்டடங்களும், பொதுமக்கள் பயன்படுத்த பேருந்து நிழற்குடை / பேருந்து நிலையம், கதிரடிக்கும் களம் உட்பட 6,480 பணிகள் எடுக்கப்பட்டு 5,783 பணிகள் முடிக்கப்பட்டு மீதமுள்ள பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம்
இத்திட்டத்தின்கீழ் சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களது தொகுதிகளில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளுக்காக நிலையான சொத்துகளை உருவாக்குவது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தின் கீழ், ஒரு தொகுதிக்கு ஒரு ஆண்டிற்கு ரூ.3.00 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.702 கோடி வீதம் 2021-22 2022-23, 2023-24 மற்றும் 2024-25 ஆம் ஆண்டிற்கு மொத்தம் ரூ.2,808 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இத்திட்டத்தின்கீழ் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை பயன்பாட்டிற்காக 5872 கட்டடங்களும் 1245 பிறதுறைக்கான கட்டடங்களும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பேருந்து நிழற்குடை / பேருந்து நிலையம் எரிமேடை, சுடுகாடுகளுக்கு சுற்றுசுவர் போன்ற உட்கட்டமைப்புகள் உட்பட 34015 பணிகள் எடுக்கப்பட்டு 26,338 பணிகள் முடிக்கப்பட்டு மீதமுள்ள பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.
பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டம்
பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டமானது 1993ஆம் ஆண்டு ஒன்றிய அரசால் தொடங்கப்பட்டு, ஊரகம் மற்றும் நகர்புற பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதில் உள்ள இடைவெளிகளை நிரப்பிட வழிவகை செய்கிறது. 2021-22 ஆண்டிற்கு ரூ.2 கோடியும் 2022.23, 2023-24, மற்றும் 2024-25ஆம் நிதியாண்டில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு ரூ.5 கோடி வீதம் என்ற நிதி ஒதுக்கீட்டுடன் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை பயன்பாட்டிற்காக 1060 கட்டடங்களும் மற்றும் 333 பிறதுறைக்கான கட்டடங்களும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பேருந்து நிழற்குடை / பேருந்து நிலையம் மற்றும் கதிரடிக்கும் களம் ஆகிய 498 பணிகளும் உட்பட 7,467 பணிகள் எடுக்கப்பட்டு 6,156 பணிகள் முடிக்கப்பட்டு மீதமுள்ள பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.
தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்)
தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டத்தின்கீழ் ஒவ்வொரு குடும்பத்திலும் பாதுகாப்பான கழிப்பறை வசதிகள் பெரும் பொருட்டு 2021-22-இல் இருந்து இதுவரை 2,43,770 குடும்பங்களுக்கு கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் குடியிருப்புகள் மற்றும் பிறகுடியிருப்புகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு கழிப்பறை கட்ட போதிய இட வசதி இல்லாத காரணத்தினால் அந்தக் குடியிருப்புகளுக்கு 5,110 சமுதாய சுகாதார வளாகங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.
நம்ம ஊரு சூப்பரு பிரச்சாரம்:
நம்ம ஊரு சூப்பரு – Namma Ooru Sooperu’ சுகாதாரம் மற்றும் திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் கிராமப்புற சமூகத்தினரிடையே நடத்தை மாற்றத்தை ஏற்படுத்தவும், அதை நிலைநிறுத்தவும் சிறப்புப் பிரச்சாரம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அனைத்துக் கிராம ஊராட்சிகளிலும் தொடங்கப்பட்டு அக்டோபர் மாதம் 2ம் தேதி வரை நடத்தப்பட்டது. “நம்ம ஊரு சூப்பரு இயக்கம்” செயல்படுத்தப்பட்டபோது 37 மாவட்டங்களில் ஊரகப் பகுதிகளில் சுமார் 47,339 குப்பை கொட்டும் இடங்கள் 16,829 பொது இடங்கள், 21.775 பள்ளிகள், 22,695 அங்கன்வாடிகள். 45,824 அரசு கட்டடங்கள் / நிறுவனங்கள், 47,949 கிராமப்புற நீர் நிலைகள், 10,011 சமுதாய சுகாதார வளாகம், 15,69,348 மீட்டர் கழிவுநீர் வடிகால்கள் ஆகியவை சுமார் 14,31,591 பணியாளர்களைக் கொண்டு தீவிர துப்புரவு நடவடிக்கைகளில் பங்கேற்றுச் சுத்தம் செய்யப்பட்டன. ஊக்குவிப்பாளர்கள் சுய உதவிக் குழுக்கள் / ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினர்களால் 13,659 பள்ளிகள் மற்றும் 343 கல்லூரிகளில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு ஒரே வாரத்தில் 4 லட்சம் மரங்கள் நடப்பட்டன.
தீவிர துப்புரவு நடவடிக்கையின் வாயிலாக 2,563.9 டன் கழிவுகள் சேகரிக்கப்பட்டன. இதில் சுமார் 45% கழிவுகள் குப்பைகளைப் பிரிக்கும் கொட்டகைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டும் மீதம் உள்ள கழிவுகள் நுண் உரமாக்கப்பட்டும், உரக்குழிகள் மற்றும் நெகிழி கழிவு மேலாண்மை அலகுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டன.
ஒன்றிய அரசின் விருது
ஒவ்வொரு ஆண்டும் ஜல்சக்தி அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை மூலம் ஊரகப் பகுதிகளில் உள்ள சுகாதாரத்தின் தரம் மற்றும் சுகாதார உட்கட்டமைப்பில் அடைந்த முன்னேற்றம் ஆகியவற்றை முக்கிய அளவீடுகளாகக் கொண்டு இந்தியாவிலுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தரவரிசைப்படுத்தப்படும். அதன் அடிப்படையில் 2021-22ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சுகாதாரத்திற்கான மதிப்பீட்டில் தேசிய அளவில் தமிழ்நாட்டிற்கு குடியரசுத் தலைவர் அவர்களால் மூன்றாம் இடத்திற்கான விருது வழங்கப்பட்டது.
ஜல் ஜீவன் திட்டம்
2024ஆம் ஆண்டிற்குள் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கிடவும், தேவையான அளவிலும நிர்ணயிக்கப்பட்ட BIS 10500 தரத்திலும் வழக்கமான மற்றும் நீண்ட காலத் தேவைக்கு ஏற்பக் குறைந்த குடிநீர் சேவை கட்டணத்துடன் குடிநீர் விநியோகம் செய்வதே ஜல்ஜீவன் இயக்கத்தின் நோக்கமாகும். ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் இதுவரை கிராமப் புறங்களின் 7151339 வீடுகளுக்கு ரூ.2,123.36 கோடியில் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இப்படி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் ஆட்சி இந்தியாவிற்கே வழிகாட்டும் மகத்தான திட்டங்கள் பலவற்றைச் சிறப்பாக நிறைவேற்றி வெற்றிகண்டு வரலாறு படைத்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.